உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. ஆல்பர்ட் மீண்டும் ஆப்பிரிக்காவில்

உயிர் இரக்கத்தால் உந்தப்பட்ட ஆல்பர்ட் சுவைட்சர் ஆப்பிரிக்காவில் வாழும் நீகிரோவர்க்குத் தொண்டு செய்வதற்காக 1913ஆம் ஆண்டு முறையாகப் போய்ச் சேர்ந்தார்.அம்முதற்றடவையில் நாலரையாண்டுகள் பணி செய்தார். அதன்பின் ஏற்பட்ட முதல் உலகப் போரால் போர்க்கைதி யாக்கப் பெற்று ஐரோப்பாவுக்கு வந்தார். ஐரோப்பாவிற்கு வந்தாலும் மீண்டும் ஆப்பிரிக்காவுக்குச் சென்று தொண்டு செய்வதையே விரும்பினார். அங்குப் போய்ப் பணி செய்வதற்கு வேண்டிய பணத்தைத் தேடிக்கொள்வதற்காகவே உழைத்தார். வேண்டிய அளவு பணத்தை ஈட்டியதும் 1970 ஆம் ஆண்டில் இரண்டாம் முறையாக ஆப்பிரிக்காவுக்குச் சென்றார்.

ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இலாம்பரினியில் மருத்துவமனை இருந்தது.ஆல்பர்ட் தோற்றுவித்து வளமுற நடத்திய மருத்துவமனை அது. சில ஆண்டுகள் பேணுவாறற்றமையால் அதன் பெரும்பாலான பகுதிகள் அழிபாடு அடைந்தன. ஓரிரண்டு கட்டடங்களின் அடித்தளங்கள் எஞ்சி நின்றன. சிலவற்றின் கூரைகள் பழதடைந்து கிடந்தன. அவற்றைப் பெருமுயற்சியால் சரிப்படுத்தி மருத்துவப் பணி புரிந்தார். நோயாளர் எண்ணிக்கை பெருக்கிக்கொண்டு வந்தமையால், ஐரோப்பாவில் இருந்து இரண்டு மருத்துவர்களையும் இரண்டு தாதியர்களையும் வரவழைத்துக் கொண்டார்.

இந்நிலையில் கடுமையான உணவுப்பஞ்சம் உண்டாயிற்று. வயிற்றுக் கடுப்பு நோய் பெருகியது. மருத்துவமனை போதாததால் இடத்தை மாற்றி விரிவாகக் கட்டவேண்டிய இன்றியமையாமை ஏற்பட்டது.ஆற்று வெள்ளம், மலையில் இருந்துவரும் நீர்ப்பெருக்கு ஆயன தொல்லை தராத மேடான இடத்தில் கட்டடம் கட்டினார். பக்கங்களில் பயன்மிக்க பழமரங்கள் நட்டினார். இரண்டே ஆண்டுகளில் திரும்ப எண்ணியிருந்த அவர் திட்டம் மூன்றரை யாண்டாக வளர்ந்தது. 1927 சனவரியில் புதிய இடத்திற்கு மருத்து வமனையை மாற்றி அமைத்து மற்ற மருத்துவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்தார். ஐரோப்பாவுக்குப் பயணப்பட்டார்.