உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

இளங்குமரனார் தமிழ்வளம் - 29

புலவர்கள் பலரும் அமைதி கொண்டனர், ஆங்கிருந்த குமரனார் வீறுடன் எழுந்தார், "வீரச் செம்மலே, தாங்கள் கூறியவாறு உண்மையை மறைக்காமல் கூறுகிறேன். தங்களிடம் இன்னாததும் உண்டு; தங்கள் பகைவரிடம் இனியதும் உண்டு; கேளுங்கள்:

"தாங்கள் அச்சம் என்னும் ஒரு பொருளை அறியாமல் அமர்க்களம் போகிறீர்கள்; ஆங்கும் பகைவர் படைகளுக்கு நேர் முன்னர்ச் சென்று நிற்கிறீர்கள்; வாள் வேல், வில் விளையாடும் வெங்கொடுமைக் களத்திலே புகுந்து வீறுடன் போரிடும் தங்களை அவை வெட்டவும், குத்தவும், துளைக்கவும் செய்கின்றன; அதனால் உடலெங்கும் ஒரே வடுவாகக் காட்சியளிக்கின்றது; ஆதலால் தங்கள் ஆண்மையைப் பிறர் சொல்ல இனிமையாகக் கேட்டவர்கள் நேரில் வந்து தங்கள் உடலைக் காணுங்கால் அது இன்னாததாகத் தோன்றுகின்றது. தங்கள் பகைவர்களோ களத்தில் புறமுதுகிட்டு ஓடி ஒளிவதால் கேள்விக்கு இனிமை இல்லாதவராகத் தோன்று கின்றனர். ஆனால் நேரில் காணும்போது சிறிய வடுவும் இல்லாதவர் களாய்ப் பொலிவு மிக்க உடலுடன் கண்ணுக்கு இனியவராகக் காட்சி வழங்குகின்றனர். தாங்களும் ஒருவகையில் இனியர்; அவர்களும் ஒருவகையில் இனியர்; தாங்களும் ஒரு வகையில் இன்னாதவர்; அவர்களும் அவ்வாறே ஒரு வகையில் இன்னாதவர் எனினும் தங்களை மட்டுமே உலகம் பாராட்டுகின்றது. இஃது ஏன்? எனக்கு உண்மை புலப்படவில்லை. பெருமானே, தாங்கள் அறியக்கூடுமாயின் அறிந்து கூறுக" என்றார்.

திருக்கிள்ளி நுண்ணிய அறிவினன்; புலவர் வஞ்சமாக உரைத்ததிலே உள்ள புகழ்ச்சியை அறிந்தான்; புலவர்களும் வியந்தனர்; குமரனாரின் சொல்லாற்றலும் கருத்தாற்றலும் அவையை மகிழ்வித்தன.

புலமைச் சீர்மை பெரிது; புகழ்ச்சியால் பழிப்பு உண்டாகவும் செய்யலாம்.பழிப்பால் புகழ் உண்டாகவும் பாடலாம் பாடுவோர் திறமையைப் பொறுத்தது. அத்திறத்தில் வல்லவர் மதுரைக் குமரனார் என்பதில் ஐயம் இல்லை.