உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்பொருள் நுண்மைவிளக்கம்

173

நி

நிச்ச நிரப்பு: நாடோறும் நாடோறும் இரவான் வருந்தித் தன் வயிறு நிறைத்தல். (திருக். 532. பரி.)

நிச்சல்: நிச்ச என்னும் சொல் நாள்தோறும் என்னும் பொருட்டாதல் “நிச்சமும் பெண்பாற் குரிய வென்ப” என்னும் தொல்காப்பியக் களவியற் சூத்திரத்திற் (8) காண்க. நிச்ச 'நிச்சல்' எனத் திரிந்தது. 'நிச்சல் ஏத்து நெல்வாயினர்” எனத் தேவாரத்துப் போந்தது. இச்சொல் வடமொழியிற் சென்று 'நித்யங், என வழங்கும். (திருவொற்றி முருகர். 185)

நிமலன்: மலம் இல்லாதவன். அவன் சிவபெருமான்; இச் சொல்லின் முதலில் இன்மைப் பொருளை உணர்த்தும் நிர் என்னும் வடமொழி, இடைச்சொல் ஈறுகெட்டுப் புணர்ந்தது. (திருவொற்றி முருகர் மும்மணிக் கோவை. 58.)

நிரப்பு: (1) வயிறு காய் பெரும் பசியால் அவ்வயிற்றை நிரப்பும் பொருட்டு இரந்து செல்லும் இன்னல் நிலையே நிரப்பு. (சங்க நூற் கட்டுரைகள். II. 6.)

(2) நிரப்பு என்றது நாள்தோறும் தன்னுடைய நடைக்கு வேண்டுவன இரந்து கொண்டு வந்து நிரப்புதல்.

(நாலடி. 289. விள. உ.)

நிரை: நிரை என்பது நிரைத்தல் நிரைந்து முதலியனவாய் வரலன்றி நிரல், நிரந்து, நிரம்பி, நிரம்பிய முதலியனவாயும் வரும். நிரம்பிய - நிரையான. “நிரம்பிய மாடம்” இராமாயணம்.

(செந்தமிழ். 11: 120)

நிலம்: தன்கட் டோன்றுவனவெல்லாம் அழிதல் மாலைய ஆதலின் அவற்றை நோக்கத் தான் நிலைபேறுடைய தென்பது பற்றி இவ்வுலகம் நிலம் எனவும் வையம் எனவும் கூறப்படும். நிலைப்பது நிலம்; வைகுவது வையம். வைகுதல் - தங்குதல்.

(திருக்குறள். தண்டி. 22.)