சொற்பொருள் நுண்மைவிளக்கம்
263
இளம்பூரணர் அஃது “அச்சம்போல நீடு நில்லாது கதுமெனத் தோன்றி மாய்வதொரு குறிப்பு. அதனைத் துணுக்கு என்றான் என்பது” என்று கூறினார். வெரூஉதலைத் தரும் விலங்கை வெருகு என்று இயற்கையறிவோடு வழங்கினர்.
(சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம். 220.)
வெரூஉதல்: வெரூஉதல் என்பது விலங்கும் புள்ளும் போல வெருவி நிகழும் உள்ள நிகழ்ச்சி. அஃது அஞ்ச வேண்டா தன கண்ட வழியும் கடிதில் பிறந்து மாறுவதோர் வெளி.
(தொல். பொருள். 260. பேரா.)
வெள்ளாங்குருகு: வெள்ளைக்கொக்கு. இது நாரையின் இனமாகிய ஒருவகைப் பறவை. தோற்றத்திற் பெரும்பான்மை யும் நாரையையே ஒக்கும். நிறம்மட்டும் தூயவெண்மையாக இருக்கும். (ஐங்குறு. 151 விளக்கம். பெருமழை.) வெள்ளைநோக்கு: உள்ளே ஒன்றும் கொள்ளாத நோக்கு.
(சீவக. 1099. நச்.)
வெளிநிலம்: முதன் முதல் செயற்கைப்பயிர் செய்தற்கு வெளிநிலங்களே பயன்பட்டமையின் அவை வயல், புலம் என்று பெயர் பெறலாயின. வயல் என்னும் சொல்லுக்கு முதற் பொருள் வெளி என்பதே ஆகும். புலம் என்னும் சொல்லும் எவை தம்மாலும் மறைக்கப்படாமல் கண்ணுக்குப் புலப்பட்டுக் கிடக்கும் வெளியிடத்தையே உணர்த்தும். மேலும், இயற்கையில் வறிதாய்க்கிடந்த வெளிநிலம் அறிவர் சிலரால் முதல்முதல் கிண்டிக் கிளறிப் பயிர் செய்தற்கு ஏற்றபடியாகச் செய்யப் பட்டமையிற் பின்னர் அது ‘செய்’ என்றும், பண்ணப்பட்டமை யிற் ‘பண்ணை' ‘பணை’ என்றுஞ் செறப்பட்டமையின் அஃதா வது கீறப்பட்டமையின் செறு என்றும் வழங்கப் படலாயிற்று.
கிளறுதலாலும் தண்ணீர் பாய்ச்சுதலாலும் இறுகிய மண்கழன்று நிலம் மென்பதம் அடைதலின் அங்ஙனம் கழன்ற வயல் நிலம் ‘கழனி' எனப்பட்டது.
பண்படுத்தப்பட்ட அக்கழனியில் வித்திய நெல் ஒன்று பல்லாயிரமாய்ப் பயன் தந்ததாகலிற் பின்னர் அது ‘பழனம்’, விளையுள்', எனப் பெயர் பெறலாயிற்று. பயன், பழம், பழன், விளைவு முதலியனவெல்லாம் ஒரே பொருளைத் தரும் சொற் களாம்.