உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. வள்ளுவர் வழி

திருவள்ளுவர் யார்? அவர் ஊர் யாது? அவர்தம் பெற்றோர் யாவர்? அவர் எங்கு வளர்ந்தார்? எவ்வாறு வளர்ந்தார்? அவர் தம் வாழ்வு நிகழ்ச்சிகள் எவை? இவ்வினாக்களுக்கு மனநிறைவானதும் தெளிவானதும் ஆகிய விடைகாண்பது அரிது. ஆனால் வள்ளுவர் அறவோர் என்பதும், உலக அமைதிக்கு அருமருந்தாம் நூல் அருளியவர் என்பதும், அவர் பிறப்பால் அவர் தம் பெற்றோர் பெற்ற நலத்தினும் இவ்வுலகம் பெற்ற நலமே பெரிது என்பதும் அவர் தம் நூலால் தெளிவாக அறியக்கிடக்கின்றன.

பழிக்குப் பழி :

'பல்லுக்குப் பல்', 'கண்ணுக்குக் கண்', 'பழிக்குப்பழி' என்பன பல இடங்களிலும் பலர் வாயிலும் கேட்கும் பழமொழி கள்; இவை ஆட்சிச் சட்டமாக இருந்த துண்டு என்பதும் ஆண்டு மாண்ட மக்கள் வரலாற்றுக் குறிப்புக்களால் புலப்படாமல் இல்லை. இத்தகைய உலகில், 'பழிக்குப் பழியே' நீதிநெறி என்றும், வீரவாழ்வு என்றும் கருதி வாழ்வோர் சூழலில் இருந்து கொண்டு "பழிக்குப்பழி வாங்குதல் கூடாது; அவ்வெண்ணம் அரும்புவதே தவறு; பாவம்" என்று ஒருவர் உரைக்க வேண்டு மானால் எத்தகைய உரம் அவருக்கு இருத்தல் வேண்டும்?

வள்ளுவர் வழி :

'வீட்டில் அமைதி தவழ்வதே உலக அமைதிக்கு அடிப்படை' என்பது வள்ளுவர் தெளிந்த கருத்து. வீட்டில் அமைதி உண்டாகும் போது தான் ஊரிலும் நாட்டிலும் அமைதி காணமுடியும். பற்பல வீடுகளையும் ஊர்களையும் கொண்டது தானே நாடு! ஆகவே தனி வாழ்வின் அமைதியால் உலக வாழ்வில் அமைதி வேண்டும்; அறவோர்கள் அமைதி உண்டாக்கப்பாடுபடவும் வேண்டும் என்று திட்டவட்டமாகக் கருதினார். அக்கருத்தால், தமிழர் தலை