உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறவோர் அமைதிப் பணிகள்

தன்னுயிரும் மன்னுயிரும்:

97

ஒருவன் மற்றொருவனைத் தாக்குவதற்குக் கொடிய கருவி யுடன் நிற்கிறான். கருவியின் தாக்குதலால் உண்டாகும் துன்பம் அளப்பெரியது. குருதி கொட்டும்; குற்றுயிரும் ஆகும்; இறப்பும் நேரும். இக்கொடுமையை அருளாளர் வள்ளுவரால் காணப் பொறுக்கவில்லை. கருவியைக் கையகத்துக் கொண்டு விலங்கு ணர்வுடன் நிற்பவனை, நேரில் காண்கிறார். "இக் கருவியால் உன்னை வெட்டினால் உனக்கு எத்தகைய துன்பம் உண்டாகும் என்பதை நன்றாக அறிவாய் அல்லவா? அத்தகைய துன்பம் தானே இவனுக்கும் உண்டாகும்! தன்னுயிர்க்கு வரும் துன்பத்தை அறிபவன், பிற உயிர்களுக்கு வரும் துன்பத்தை மட்டும் அறியத் தவறுவது ஏன்?" என்று ஒரு வினாவை எழுப்புகிறார். சிறிது அறிவுடைய வனையும் சிந்திக்க வைக்காமல் விடாதே இவ்வினா.

அறிவால் ஆகும் பயன் :

ஓர் அறிவாளனைக் காணுகிறார் வள்ளுவர். அவன் தன் சொல்லாற்றலால் மக்களுக்குள் பகையையும், வெறியையும் மூட்டு கிறான். அவன் சொல்லில் மயங்கிய மக்கள் விளக் கொளியில் வீழ்ந்துபடும் விட்டிலைப்போல் மாய்வார்கள் என்பதை அறிகிறார். ஆதலால் ஆங்குச் செல்கிறார். “அறிஞனே! அறிவினால் ஆகிய பயன் தான் என்ன? பிற உயிர்களையும் உன் உயிர் போலப் பேணிக் காப்பதற்காகத் தானே அறிவைப் பெற்றாய். அவ்வறிவை அழிவு வழிகளுக்கும், அமைதிக் கேட்டுக்கும் பயன்படுத்துவாய் ஆனால், நீ பெற்ற அறிவால் ஆகும் பயன் தான் என்ன? 'போன போக்கெல்லாம் மனத்தைப் போகவிடாமல், நல்வழியில் திருப்புவதே அறிவு' என்பதை அறிவாயாக; அறிவினை ஆக்கப்பணிக்குப் பயன்படுத்துவாயாக' என்றார். அதனைக் கேட்டு நடக்கத் தவறினால் அவன் அறிவுடையவன் ஆக மாட்டானே!

1. குறள் : 422 2.குறள் : 773.