உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நயமிலா நன்னன் :

அறவோர் அமைதிப் பணிகள்

119

நன்னன் என்பவன் ஓர் அரசன். ஆற்றில் மிதந்து வந்த மாங்கனி ஒன்றை எடுத்துத் தின்ற அறியாக் குற்றத்திற்காக இளஞ்செல்வி ஒருத்தியைக் கொன்றொழித்த பாவி அவன்! அவன் 'பெண்கொலை புரிந்த நன்னன்' என்று பேசப்பட்டான். அவன் பரிசிலைக்கருதிப் புகழ்ந்து பாடுதற்குப் புலவர் எவரும் சென்றார் அல்லர். அவனை என்ன, அவன் பரம்பரையையே பாடுவது பாவம் என்று ஒதுக்கினார்.

நன்னன் வழியில் வந்தவன் இளவிச்சிக்கோ என்பவன். அண்ணனும் தம்பியும் அமைந்து வாழ அருந் தொண்டாற்றிய புலவர் பெருந்தலைச் சாத்தனாரை அறிவோம். அவர் காணுகிறார் இளவிச்சிக்கோவை. இளங்கண்டீரக்கோ என்னும் அரசனுடன் அவன் கூடியிருக்கும்போது காணுகிறார். பிறர்

ஒருவனாக இருப்பானே ஆனால், 'நீங்கள் இவ்வாறு இணைந்து நெடிது வாழ்க' என்று வாழ்த்தி இருப்பார். ஆனால் புலவர் இங்கு அவ்வாறு செய்தாரல்லர்.

ஏன். தழுவவில்லை :

இளங்கண்டீரக்கோவைத் தம் அன்பெல்லாம் கூட்டித் தழுவி இன்புற்றார். விச்சிகோவை ஏறெடுத்துப் பார்க்கவில்லை. இது விச்சிக்கோவுக்குப் பெரிய மானக் கேடாகத் தோன்றியது. ஆகவே, 'என்னை ஏன் அவ்வாறு தழுவி இன்புறவில்லை' என்று புலவரிடம் வினாவினான்.

அறப் புலவர் - அமைதித் தொண்டர்-மறைத்தாரா? உடனே, "நீ தழுவுவதற்குத் தக்கவன் தான் என்றாலும், 'பெண்கொலை புரிந்த நன்னன் வழியில் வந்தவன்' என்ற ஒன்று உன்னைத் தழுவத் தடையாக உள்ளது" என்றார். அறப்பணிக்குத் துணையாவாரை வாழ்த்தும் நெஞ்சம், அதற்குக் கேடு சூழ்வாரைப் புறக்கணிக்கத் தவறாதன்றோ!

இங்குக் கண்ட குறிப்புக்களால் சங்கச் சான்றோர் சால்பும், அவர்கள் செய்த அமைதித் தொண்டும் ஒருவாறு புலனாம், இனிச், சமயச் சான்றோர் ஆற்றிய அமைதிப் பணிகளை அறிவோம்.

1. புறநானூறு: 157.