உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

துன்புற்றார்; பிச்சை எடுத்துண்டு வாழ்ந்தார்; பார்க்கவர், ஆலார காலாமர், உருத்திரக ராமபுத்திரர், இப்படி எத்துணையோ துறவி களைத் தேடித் தேடி அவர்கள் துறவு நெறியைப் பின்பற்றிச் சென்று பயனற்று வெளியேறினார்; கடுந் துறவிகளும் பின் பற்றுதற்கு அரியது என்னும் வழிகளில் சென்றும் ஆராய்ந்து துயருற்றார்.

ஓங்கிய உறுதி:

"எவ்விதச் சிந்தனைக்கும் இடம் தராமல் உறுதிப் பாட்டுடன் ஐம்புலன்களையும் அடக்கினேன். இதனால் அமைதி ஏற்படவில்லை. பின்னர் வாயாலும், மூக்காலும் மூச்சு விடுவதை நிறுத்தினேன்.அப்பொழுது கொல்லன் துருத்தியில் வெளியேறுவது போலச் செவியின் வழியே காற்று வெளிவந்தது. அதையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் உறுதியுடன் வாயையும், மூக்கையும், காதுகளையும் அடைத்து மூச்சைப் பிடித்தேன். என் தலையை வாரைக் கொண்டு இறுக்கிக் கட்டுவது போலவும், நெருப்பால் சுட்டெரிப்பது போலவும், என் உடலை ஈட்டியால் குத்துவது போலவும் நோவு உண்டாயிற்று. இதற்கும் என் உறுதிப்பாடு குறைந்து விடவில்லை" என்று புத்தரே தாம் கொண்ட கடு நோன்பைக் குறிப்பிடுகிறார்.

புத்தரின் புனித ஆசை:

நாடு நகரங்களையும் உற்றார் உறவினர்களையும் துறந்து சென்ற பேரருளாளர் கௌதமர். அவர், தன் நாட்டில் இரந்துண்டு திரிவதைக் கண்டு வருந்துகிறார். மகத நாட்டின் மன்னன் பிம்பிசாரன். கௌதமரை அழைத்துத் தன் நாட்டையே ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டுகிறான். அதனை ஏற்பாரா கௌதமர்? என் நாட்டில் இருக்கும் காலம் வரையாவது இரந்துண்டு வாழ்வதை விடுத்து என் விருந்தாளியாக இருத்தல் வேண்டும்' என்று வேண்டுகிறான். "உயிர்களின் உய்தற்குரிய வழியைக் காண விழைகிறேன்; அதனைக் காணும் வரை என் உறுதிப்பாட்டைக் கைவிடேன்" என்று மகத மன்னனுக்கு உரைத்து நடந்து விடுகிறார் கௌதமர். அவர் எதனைத் தேடி அலைந்தாரோ அதனை ஒருநாள் கண்டடைகிறார். தாம் பெற்ற இன்பத்தை உலகமும் பெறவேண்டும் என்று ஆவல் கொள்கின்றார். 'ஆசையே அல்லல்களுக்கெல்லாம் அடிப்படை' என்னும் தெளிவு கண்ட அருளாளர் புத்தர். அவருக்கும் ஆசை அற்றுப் போய் விடவில்லை. உயிர் அனைத்தும் அல்லல் அற்ற இன்ப வாழ்வு வாழவேண்டும் என்ற பேராசை