உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை

பண்டை நாட்களில் வாழ்ந்த அருந்தவச் செல்வர்களின் வாழ்க்கை வரலாறுகளை அறிந்துகொள்வது தனிப்பட்டவர்களின் வாழ்க்கை நெறிகளைச் செம்மைப்படுத்திக் கொள்வதற்கும் உயர்ந்ததொரு குறிக்கோளை மனத்திற் கொண்டு எண்ணத்தில் திண்மை பெற்று எண்ணியாங் கெய்துவதற்கும் பயன்படும் என்பது உண்மை. உற்றோர், மற்றோர் என்று வேறுபாடு கருதாது வீட்டினர், நாட்டினர் என்று மாறுபாடு பாராது நாட்டுக்கு உழைத்திட்ட நல்லவர்கள் பலர். அவர்கள் வாழ்ந்த முறையை வகைப்படுத்திக் கூறும் வாழ்க்கை வரலாற்று நூல்களைக் கழகம் பல்லாண்டுகளாக வெளியிட்டு வருகின்றது.

அவ்வரிசையில்

அடிமைத்தளையகற்றிய

அண்ணல்

ஆபிரகாம் லிங்கனைப் பற்றிய இந்நூல் வெளியாகின்றது. லிங்கன் குடிசையில் பிறந்தவர். குடியரசுத்தலைவராக இறந்தவர். அடிமை களுக்குக் கண்கண்ட தெய்வம். அமெரிக்கருக்கு அவர் ஒரு காந்தி. மக்களை மாக்களாக்கிய மாக்களை, மக்களாக்கிய மனிதகுலத் தோன்றல். மக்களால், மக்களைக் கொண்டு மக்களுக்காக அமைக்கப்பட்ட அரசாட்சி என்றுமே அழியாது என்றுரைத்த அரசியலறிஞர். அடியவர்க் கெளியராய் விளங்கிய அவர்க்குக் கொடியவன் அளித்த பரிசு குண்டு. அதுவே நன்மைக்குத் தீமையளித்த பரிசு. அத்தகையோரின் வாழ்க்கையை அறிந்து கொள்ளவேண்டியது ஒவ்வொரு வருடைய கடமையாகும்.

இந் நூலைச் செம்மையாகவும், சுருக்கமாகவும் எழுதித் தந்த திரு.இரா.இளங்குமரன் அவர்கட்குக் கழகம் தன் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது. இதுபோன்ற நூற்களைச் சிறியோரும் பெரியோரும் நன்கு கற்றுப் பயனடைவார்களென நம்புகிறோம்.