உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

நல்வாழ்வு வாழ விரும்புவார்க்கு 'வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த' பெருமக்கள் வரலாறுபோல் அமையும் வழிகாட்டி எதுவும் இல்லை. இக்கருத்தால் அனைத்து அதிகாரங்களும் தம் கையகத்தே குவிந்திருந்தும் அவற்றை அறவழிக்கு அன்றிப் பிற வழிக்குப் பயன்படுத்தாத அமெரிக்கப் பெருந்தலைவர் ‘அண்ணல் ஆபிரகாம்' லிங்கன் வரலாற்றை எழுதினேன். இவ்வரலாறு கற்பவர் நெஞ்சினில் நிலைத்து நற்பயன் விளைக்கும் என்பது என் கருத்து.

என் பிஞ்சு நெஞ்சின் ஊற்றமும் உணர்வும் கொண்டு முகிழ்த்த முதல் வரலாற்று நூலாம் இதனை, ஆயிரத்தின் மேலும் அருந்தமிழ் நூல்கள் வெளியிட்டுச் சீரிய பணிபுரிந்து வரும் திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிடுவது குறித்து மட்டற்ற மகிழ்ச்சி. கழக உறுப்பினர் கட்கும், ஒல்லும் வகையால் உயர் கடனாற்றும் கழக ஆட்சிப் பொறுப்பாளர் உயர்திரு. வ. சுப்பையா பிள்ளை அவர்களுக்கும் என் உழுவலன்புடன் கூடிய கெழுதகை நன்றி உரித்தாகுக. தமிழ் வெல்க!

மதுரை 15-2-1965

இரா. இளங்குமரன்