உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

இறந்து போனார் என்னும் எண்ணத்தால்தான் கூட்டம் கலைந்தது! ஆனால் அவர் ஒருவாறு உயிர் பிழைத்தார்.

ஏனையோர்க் கிரக்கம் :

நபிகளைச் சூழ்ந்த துயரம், அவரைப் பின்பற்றிச் செல்ல முன்வந்தவர்களையும் சூழத் தவறவில்லை. நபிகளை, 'இறைவன் தூதர்' என ஏற்றுக்கொண்ட ஒரே ஒரு காரணத்திற்காக ஒருவனது இரண்டு கால்களிலும் இரண்டு ஒட்டகங்களைக் கட்டி எதிர் எதிராக ஓட்டினர். அவன் சுவடுகள் கிழிக்கப் பெற்றுக் கொடுமையாக மாண்டான். நபிகள் தமக்கு நேரிடும் அல்லல்களை அமைதியாகத் தாங்கினார். ஆனால் தம்மைப் பின்பற்றுவோர் படும் கொடுமையைக் காணப்பொறுக்க முடியாமல் கண்ணீர் வடித்துக் கலங்கினார். அவ்வேளையிலும் இன்னல்களைப் பொறுத்துக் கொண்டு உறுதிநிலையில் பிறழாது இருக்குமாறே வேண்டினார்; பதிலுக்குப் பதில் தாக்குவதைச் சற்றும் விரும்பினார் அல்லர்! தாம் உண்மையெனக் கண்டதை ஊரறியச் சொல்லு வதற்கு அவர் அஞ்சினாரும் அல்லர்!

உறுதி பெரிது:

ஒருநாள் நபிகளின் பெரிய தந்தையார் அபூதாலிப் வந்தார். அவர் "என்மேல் இரக்கம் கொண்டாவது இப்பணியை விடுவீராக; வாணிகர்கள் பகையோ மிக மிக வலுக்கிறது" என்று மன்றாடினார். ஆனால் அண்ணலார், “அல்லாவின் ஆணையாகச் சொல்லுகிறேன். வலக்கையில் ஞாயிற்றையும், இடக்கையில் திங்களையும வைத்து, என்பணியை விடுமாறு கட்டளையிட்டால் கூட அதனை விட்டொழிக்க மாட்டேன்” என்றார். உலகத்தை உய்யச்செய்யும் வண்ணம் வந்த பெருமக்களின் உறுதிப்பாடு-அம்மவோ! எவ்வளவு பெரிது!

நபிகளைக் கல்லால் அடித்துக் குருதி வரச் செய்தான் ஒருவன். அவனை அடித்துப் பெரிய புண்ணை உண்டாக்கி விட்டார் நபிகள் மேல் பேரன்பு கொண்ட ஒருவர். அவர் தம் வெற்றிக் களிப்பை அண்ணலாரிடம் ஓடி வந்து உரைத்தார். அப்பொழுது நபிகள், 'இசுலாத்தின் பகைவர்களைப் பழிதீர்க்க வேண்டும் என்பது என் வேட்கை அன்று. அவர்களுக்கு இன்னல் அளிப்பதை நான் துளியேனும் விரும்பவில்லை" என்றார்.