உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறவோர் அமைதிப் பணிகள்

குகையில் முகம்மது :

141

உயிர்களுக்குத் தொண்டாற்றுவதற்குத் தம்மை முழுக்க ஒப்படைக்கு முன், உயிர்களைப் படைத்த இறைவன் அருள் ஒளியை எதிர்பார்த்தார் முகம்மது. ஒரு மலை மேல் ஏறி அங்கிருந்த குகை ஒன்றில் புகுந்து அருந்தவம் கிடந்தார். அத்தவம் ஆண்டுக் கணக்கிலும் நீண்டது. நாற்பது நாட்கள் நீர் பருகாமலும், உணவு கொள்ளாமலும், நோன்பு கொண்டார். இறைவன் அருளிய பேரொளி தமக்கு எய்தப்பெற்ற பின்னர் அவர் பணி பெரிதாயிற்று. தாம் பெற்ற இன்பத்தைப் பிறரும் அடையவேண்டாவா?

மோது பகை:

'அல்லா ஒருவனே இறைவன்' என்றும், 'முகம்மது அவர்கள் அல்லாவின் திருத்தூதர் என்றும் முதற்கண் ஏற்றுக் கொண்டு முழுக்க முழுக்க அடியாராக அமைந்தவர் நபிகளின் மனைவியாரே ஆவர். அவரை அடுத்து ஏற்றுக் கொண்டவர்கள் அலி என்பவரும், சையதும் ஆவர். இவர்கள் மூவரும் ஏற்றுக் கொண்டது விந்தை தான்! ஏனெனில் பெரும்பாலும் வேற்றவர் மதிக்கவும், பெருமைப் படுத்தவும் தொடங்கிய பின்னரே தம்மவரும், உற்றார் உறவினரும் மதிக்கத்தலைப்படுவர். ஆனால் நபிகளுக்கோ அவர் தகவினை நன்கனம் அறிந்த பெருமக்கள் அடுத்திருந்தனர். அவர்கள் இறைவனது தூதர் என்று ஏற்றுக் கொண்டது முதல் வெற்றி யாகும். அடுத்து, அவர் மோதித் தீரவேண்டிய எதிர்ப்போ மலைபோல முன்னின்றது.

தலை தப்பியது:

ஒருநாள் நபிகள் கஃபாவிற்கு வருகின்றார். அவரைக் குறைசிகள் என்னும் வணிகர்கள் சூழ்ந்து கொள்கின்றனர். "நீர் தாமே எங்கள் முன்னோர் வழிபாட்டு முறைகளைப் பழித் துரைக்கின்றீர்" என்றனர். 'ஆம்' என்றார் அச்சம் அணுவளவும் கொள்ளாத அல்லாவின் தூதர்.

கூட்டத்தின் இருந்த வெறியர் மிகப்பலர். அவர்கள் சினந்து எழுந்தனர். ஒருவன் தன் துண்டை எடுத்து நபிகள் கழுத்திலே மாட்டி முடிந்த மட்டும் முறுக்கினான். நபிகளுக்கு மூச்சுத் திணறியது. மயக்கமும் உண்டாகியது. அந்நிலைமையில் நபிகளின் அன்பர் ஒருவர் உட்புகுந்து காப்பாற்றினார். ஆனால் அவர்பட்ட அல்லல் பெரிது. அவர் தாடியைப் பற்றிப் பிடுங்கி எறிந்தனர். இரத்தம் கொட்ட வலி தாழாமல் கீழே மயங்கி வீழ்ந்தார். அவர்