உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

நன்னயக் கென்னடி :

அண்ணல் ஆபிரகாமின் மறு பிறப்போ என்று கருதத் தக்க வண்ணம் அமைந்தார் தலைவர் கென்னடி. நிறவெறியை ஒழிப்பதில் நெஞ்சம் நிமிர்ந்து நின்ற அவர் பணி உலக நலம் கருதும் ஒவ்வொருவர் உள்ளத்தும் இடம்பெறத் தவறாது.

நாம் ஒன்றாக இப்புவியைக் காப்போம். அல்லது போர்த்தீயில் வீழ்ந்து அழிவோம். உலகைக் காப்பாற்ற நம்மால் முடியும். அதைக் காப்பது நமது கடமை. அப்போது மனித குலம் என்றென்றும் நமக்கு நன்றி பாராட்டும். அமைதி செய்வித்தோர் என்று நாம் கடவுளுடைய மாறாப் பேரருளுக்கு உரியவராவோம்" என்பது ஐக்கிய நாடுகளின் நிலையத்தில் ஒருமுறை கென்னடி வழங்கிய மணி மொழியாகும்.

பெரும்புகழ் குருச்சேவ்:

"சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த அமெரிக்கக் கவிஞர் லாங்பெல்லோ; அவர் தம் கவிதை ஒன்றில் எல்லா நாட்டு மக்களுக்கும் அழைப்பு விடுத்து:

'விற்களை மண்ணுக்குள் புதையுங்கள் அமைதிச் சுங்கானைப் புகையுங்கள்'

என்கிறார். புகை குடிக்கும் பழக்கம் எனக்குக் கிடையாது. ஆயினும் எல்லா வல்லரசுகளின் தலைவர்களுடனும் சேர்ந்து அமைதிச் சுங்கானைப் புகைப்பதில் உண்மையாகவே பெருத்த இன்பம் அடைவேன்" என்று முழங்கினார் உருசியத் தலைவர் குருச்சேவ்! அறைத் தகராறு:

இணைத்துக் கட்டப்பெற்ற இரட்டை வீடுகள் இருந்தன. அவற்றுள் ஒன்றில் மூன்று அறைகளும், மற்றொன்றில் நான்கு அறைகளும் இருந்தன. மூன்று அறை வீட்டில் நான்கு பேர்களும், நான்கு அறை வீட்டில் மூன்று பேர்களும் வாழ்ந்தனர். இஃது அறமற்றதாகத் தோன்றியது மூன்று அறை வீட்டார்க்கு.

நான்கு அறை வீட்டுக்காரர் ஒருநாள் குடும்பத்துடன் வெளியில் சென்றிருந்தார். அதற்குள் அவர்க்குரிய அறையொன்றின் சாளரத்தையும் கதவையும் பெயர்த்து வைத்துக் கட்டித் தம்முடைமையாக்கிக் கொண்டார் மூன்று அறை வீட்டுக்காரர்.