உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

பூத்த மலராகத் தோன்றிய வேலா வரவேற்றார் எடுத்த எடுப்பிலேயே, "என்னைப் பார்க்க வந்தீர்களா? என்றார்! யானோ ஆம் எனக் கூறாமல், 'என்மகளார் பவானியில் உள்ளார்: அவரைப் பார்க்க வேண்டி வந்தேன்; வழியில் உங்கள் நினைவால் இங்கே வந்தேன்" என்றேன்.

நான் அவரைப் பார்க்க வந்ததாகச் சொல்லுதலால் உவகை மிகும் எனினும், உண்மையாகாமையால் அவ்வாறு சொல்லாமையை, வெல்லும் சொல்லால் வேலா வென்றார்.

"ஈரோட்டிலும் உங்கள் மகளார் ஒருவர் உள்ளார் என்று இங்கு வரும்போதெல்லாம் வரவேண்டும்" என்றார்.

என்ன பேருள்ளம் வேலா உள்ளம்!

முகமனுக்காக, இட்டுக்கட்டிக் கூறும் நடிப்புரையா இது? உண்மை நெஞ்சின் உரிமை உரை என்பதைப் பின்னே, முழுவதாக அறிய முடிந்தது.

வேலா வாழும் வரையும் வளர்மதியாய் இணைந்து குறளியப் பணியிலும் நிலவுக் கூட்டங்களிலும் மாநாடுகளிலும் பங்கு கொண்டமை, ஒரு பிறவிக்கு வாய்த்தல் அரிதினும் அரிதாம். அவ்வரிய தொடர்பால் வாய்த்தது பெரிய பேரன்புத் தோன்றல் புதுவை வேலாயுதனார் கலைநிதியர் (இணையர்) தொடர்பாகும்.

-

புதுவையில் ஒரு விழா! விழாநிறைவில் உணவு வகை வகையாய் அமைந்த உணவு! விழா ஏற்பாட்டாளர் - முன்னின்றோர் -எவர்? தம் குடும்ப விழா வென ஊணாக்கி உறவாக்கி வழங்கிய பெருமையர் வேலாயுதர். கலைநிதியர்! அவர்களே புதுவைக் குறளாய அமைப்பாளர். கொள்கையால் ஒன்றியவர்! அவர் நிகழ்த்திய குறளாய இரண்டாம் மாநாடே அது. இருவரும் ஆசிரியப்பணியர்: இயற்கை ஈடுபாட்டாளர். "முப்பால் கொள்கை அன்றி, அப்பால் கொள்கை இல்லை" என்பதை இயக்கமாக்கிக் கொண்டவர். இளைய தொண்டர் பலர்க்குக் கொள்கை வழிகாட்டி. அவர்களை அவ்விழாவின் போதில் கண்ட காட்சி வாழ்வதாக.

பின்னே, எத்தனை விழாக்கள்! எத்தனை கூட்டங்கள்! எத்தனை தொடர் பொழிவுகள்! எத்தனை எத்தனை குடும்ப நிகழ்வுகள்! எத்தனை எத்தனை பள்ளிகள்! எளியேனைத் தம் குடும்பத்துள் ஒருவனாகக் கொண்டுவிட்ட குறிக்கோள் வாழ்வுக்கு மூல முதலாக இருந்தது, அன்று கண்டதும் கொண்டதுமாம் அருமைத் தொடர்பேயாம்.