உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளம் விரிந்தால் உலகெலாம் சொந்தம்

169

வேலாயுதனார் கலைநிதியர் மகவாகப் பிறக்கும் பேறு வாய்த்தவர் அருள்மொழியார். அவர் பயில்வது பயின்று பொறியியல் பட்டந்தாங்கிப் படைத்துறைப் பணியும் வாய்க்கப் பெற்றார். கூர்த்த அறிவும் சீர்த்த திறமும் செயல்வீறும் உயர்பண்பும் உடைய அவர்க்குப் பெற்றோர் 'குலப்பிரிவு மறுப்புத் திருமணமே புரிய வேண்டும்' எனக் கொண்டனர்

ஒருவர் ஒருவரை விரும்பிக், குலப்பிரிவு மறுப்பு மணமாய் நிகழ்தல் காணக்கூடியது. ஆனால் பெற்றோரே, தம் குடிவழி உரிமையர் விரும்பியிருந்தும், அதனை அறவே மறுத்தும் வெறுத்தும், "குலப்பிரிவு மறுப்புத் திருமணமே எம்மகளார்க்குப் புரிவேம்" என்னும் உறுதிப்பாட்டில் நின்றனர் என்றால், அவ் வுறுதிப்பாடே தம் உறுதிப்பாடுமாம் என நின்றவர் அருள் மொழியார்!

வாழ் நாளை, வாழ்நாளாக்கும் திருமணம், எண்ணியபடி எளிதில் வாய்க்குமா? எளிதில் வாய்ப்பன எனினும் ஏற்புடையனவா? பெற்றோர் கடமை பிள்ளைகளைத் தம்மை விட்டுத் தள்ளி விடும் செயலா திருமண வாழ்வு?

உரிய தகவும் உயர்ந்த நோக்கும் உடைய படைமேல்நர் சரவணர் என்பார் உள்ளம் ஒருப்பட்டு மணத்திற்கு இசைந்தார்!

சரவணர் கிருட்டிண கிரியினர்; பொறியியல் பட்டம் தாங்கியவர்; பெருமைமிக்க பெற்றோரையும் உற்றார் உறவினரையும் உடையவர். எல்லாவற்றின் மேலும், பணியாலும் பதவியாலும் ஒன்றுபட்ட சீர்மையர்!

வேலாயுதர் கலைநிதியர் போல், சரவணர் பெற்றோர்களும் உறவினர்களும் மணத்திற்கு ஒத்திசைந்து நிற்க வேண்டும்!

சரவணர் தந்தையார் சுப்பிரமணியனார்: நில அளவைத் துறையின் அலுவலர்: அன்னையார் சரோசினியார்; மாமா உறவினராம் திரு. வேலுச்சாமி, கல்லூரிநூலகப் பொறுப்பாளர். அறிவறிந்த குடும்பத்தவர். ஆதலால், அவர்கள் ஒன்றிநின்று குலப்பிரிவு மறுப்புத் திருமணத்தை ஏற்று நடத்தினர் நடத்தியது மட்டுமன்று: வேலாயுதர் கலைநிதியர் கொள்கை என்பதும் தம் கொள்கையே எனத் தம் குடும்பவாழ்வில் நிலைப்படுத்தி வருபவர் ஆயினர்!

சரவணர் அருள்மொழியராம் இவர்கள் திருமணம் எங்கே நிகழ்ந்தது?