உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

அருள்மொழியாரை அவர் அலுவலகம் சென்று அழைத்துக் கொண்டு இல்லம் சேர்ந்தோம்! இன்றை இரவு 11 மணிக்கு மகிழ்வுந்தில் ஆமதாபாத்து செல்ல வேண்டும்! பகல் நல்ல சுற்று! இரவும் உறங்காச் செலவு உண்டு!

ஓட்டுநர் (பெரியவரின்) மகனார் எய்தினார்! மொழியறி யார்க்கு மொழியறியார் பேசும் பேச்சு முகப் பேச்சு! முறுவல் பேச்சு! அப்பேச்சு எங்கெங்கெனினும் எவ்வெம் மொழியர் எனினும் இனிதேற்கும் பேச்சு!

பேச்சை - கருத்தை - அறிந்து கொள்ள வேலாயுதர் உள்ளார். கலைநிதியார் வந்திருப்பின் இந்தி, உருது, ஆங்கிலம் என எப்பேச்சையும் ஏற்று ஏற்ற மறுமொழி தருவார்! வேலாயுதர் ஆங்கிலம் வல்லார்! இந்தியும் சற்றே புரிவார் என்பதை வழிச் செலவில் யான் புரிந்து கொண்டேன்! ஆனால் 'சாரல்' எங்களோடு வரும் திட்டம் வாய்த்தது! ஓட்டுநர்க்கு நல்ல பேச்சுத்துணை! பயிலும் மொழி, பழகும் மொழி சாரலுக்கு இந்தியாக இருந்ததால், அவரே எங்கள் வழிகாட்டியானார்! ஓட்டுநர்க்கு மிக ஓட்டுநரும் ஆனார்!

அருளாரும் சரவணரும் மிக எண்ணித் தயக்கத் தோடே தான் மகிழ்வுந்து ஏற்பாடு செய்தனர். ஏனெனில் போக வர 4000 அயிரம் (கி.மீ.) ஆகுமே! அவ்வளவு சுற்றை என் உடல் நிலை தாங்குமா என்பது? தொடர்வண்டிப் பதிவும் இருந்தது. ஆனால், சாலை வழியே செல்லுதல் அன்றி இறங்கிக்காண வாயாதே! ஆதலால் அதனை மாற்றி மகிழ்வுந்து ஏற்பாடு செய்ய எல்லாரும் முடிவெடுத்தோம்!

இச்சுற்றில் வேலாயுதர் சாரல் யான் மூவரே! எண்மர் மிக இயல்பாக இருந்து செல்லும் மூடுந்து அது. அதனால் பின்னிருக்கைப் பகுதியை ஊடு அடைப்பாக்கிப்படுக்கையும் ஆக்கிவிட்டனர். மாறிமாறிப் படுத்துக் கொள்ளலாம் என்ற வகையில் திட்டம் செய்து வண்டி எய்தியது!

புறப்பட்டது முதலே படைத்துறை ஊர்தி எனப் பளிச்சிட அச்சிட்ட முகப்புடன் வண்டி காட்சி அளித்தது! அவ்வச்சிட்ட அட்டையின் பயனை எத்தனை எத்தனை இடங்களில் போற்றி மதிக்க வாய்க்கும் என்பதைப் புறப்படும் போது உணரக்கூட வில்லை. ஆனால் அது உணர்த்திய அளவுக்கு எல்லையே இல்லை!