உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

ரண்டு மக்களையுடையவர். மக்கள் இருவரும் மேனிலைக் கல்வியர்! தமிழகத்து வேலூர்ப்பகுதியர். அருள் சரவணர் சம்முவில் பணிசெய்தபோது ஆங்குப் பணியாற்றியவர்; மேல் பதவியர்: மேம்பட்ட அன்பர்!

இரவு, சிற்றுண்டியை முடித்துக் கொண்டு தங்கள் விடுதியில் சேர்த்தனர். எட்டாத் தொலைவில் ஏற்படும் தமிழ் உறவு எத்தகைய நிறைவாகிறது என்பதை வெளிநாடுகளில் அன்றி, வெளிமாநிலத்தில் வேற்றுமொழியர் சூழலிலும் நன்றாகவே உணரமுடியும்! காலை உணவும் வீட்டிலேயே முடித்துக் கொண்டு அவர்களும் உடனாக ஊர் சுற்றுவதென முடிவுசெய்தோம்.

1.03.2009

சோத்பூர் அரண்மனை - கோட்டை - கோயில் என்பவை ஓரிடத்திலமைந்த பெரிய வளாகமாகும். உயரமான பாறையும் மலையும் ஆகிய வளாகம். கீழே எப்பாலும் பள்ளத்தாக்குப் போல் உள்ள பகுதிகள் 'சோக்' அரசர் பெயராகும்.

சிரியா நாத்து என்பார் ஒருவர் முனிவராம் - சோக் அரசர் கட்டடம் கட்டும் போது சுவர் நில்லாமல் விழுந்து விழுந்து போயினதாம்.

முனிவரைப் போய் அரசர் கேட்க ஒரு பூதத்தின் செயலென்றும் மெகர் இனத்து ஆள் ஒருவரைப் பலிதந்தால் இடையூறு இல்லாமல் முடியுமென்றும் முனிவர் கூறினாராம். அரசர் ஒருவரைப் பலிதரல் பற்றித்திகைப்புற மெகர் இனத்து ஒருவர் வந்து தாமே பலியூட்டுக்கு இசைவதாகக் கூறி, இக் கோட்டையின் பெயர் 'மெகரங்கோட்டை' என வழங்கப்பட வேண்டும் என்றாராம். அதனால் இக்கோட்டை மெகரங்கோட்டை எனவழங்கப்படுகிறது என்றார் தாமோதரர். அம்முனிவரே இக்கோட்டை அடுத்துள்ள குடியிருப்புகள் எல்லாமும் நீலவண்ணத்தில் இருக்க வேண்டும் என்றாராம்! ஆம், பார்த்த பக்க மெல்லாம் நீலவண்ணமே தெரிந்தது.

அதனைப் பார்த்த போது 'வெள்ளக்கோயில்' நினைவுக்கு வந்தது. வெள்ளத்திற்கு ஆட்படும் இடத்தில் அமைந்த கோயில் 'வெள்ளைக் கோயிலாய்' வேறு வண்ணம் சாமிக்குப் பிடிக்காது என்று பெரிதும் வெள்ளை வண்ணத்து வீடுகளே உள்ளமை போன்ற நம்பிக்கையது என நினைத்தேன்.