உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணல் ஆபிரகாம்

77

உலகப் பிணக்குகள் எத்தனையோ இருந்த இடம் தெரியாமல் தொலையும்; நிறத்தால் வேற்றுமை காட்டிக் கொண்டிருக்கும் இழிநிலை ஒழியும்; ஆள்வோர், ஆளப்படுவோர்; ஆண்டான் அடிமை என்னும் பிணக்குகள் ஓயும். "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்,” “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்னும் உயர்நெறிகள் அரும்பும். இவற்றை நினைவு கூருமுகத்தான் ஆபிரகாமை ஒவ்வொருவர் உள்ளத் தேயும் நிறுத்திக்கொள்ள வேண்டும். அது இன்றியமையாக் கடமையாம்.

செல்வ வளமிக்க அமெரிக்க நாட்டினர் பளிக்கு மண்டபத்தே "பொற்சிலை" நிறுவிப் போற்றுகின்றனர். பளிக்கு மண்டபமே அன்றி அதன் வளாகமே தூய்மை பெற்றுவிட்டது. அமைதிக்காக வாழ்ந்த அந்த மனிதத் தெய்வத்தின் அருள் உரு ஒவ்வொருவர் உள்ளத்தும் நிறைந்து விடுமானால் உலகமே தூய்மையும் அமைதியும் பெற்றுவிடுவது உறுதி! வாழ்க அண்ணல் ஆபிரகாம் புகழ்!