உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

கொண்டு தடுத்தும், கேளாச் செவியுடன் சோதனை செய்யப் பெற்ற அணுக்குண்டு ஒன்றின் ஆற்றலை அளவிட்டுரைத்த அறிவியல் உலகின் புள்ளி விவரம் இது.

இறைவன் தன்னின் ஒரு கூறாக மனிதனைப் படைத்தான்; பிற உயிர்களுக்கு இல்லாத அளவில் மூளை முதிர்ச்சியையும் மன வளர்ச்சியையும் படைத்தருளினான். என்றாலும், அவன் விலங்கினும் கேடனாக, நச்சுயிரினும் கொடியனாகத் தலை நீட்டத் தவறுகிறான் அல்லன்.

இப்படியும் உண்டா? :

எந்த ஒரு மலையில் இருந்தேனும், மனிதர்களைத் தாக்கு வதற்காகப் புலிகள் படையெடுத்து வந்துள்ளனவா? கரடிக் கூட்டம்தான் கொடுங்காட்டில் இருந்து, கிளம்பி நாட்டு மாந்தரைத் தாக்கக் காலடி வைத்துள்ளதா? காட்டு நாய்கள் தாம் மானிடரை ஒழித்துக் கட்டுவதற்காகப் பறை முழக்கிக் கொண்டு பாய்ந்து வந்துள்ளனவா? கொடிய பாம்புகள் தாம் குழுமலாகச் சேர்ந்து குடியிருப்புகளில் நுழைந்து கொன்றொழிக்கும் கொலைவெறியுடன் வந்துள்ளனவா? அன்றி, அக்குழுமல்கள் தங்களுக்குள்ளே அணி வகுத்து நின்றேனும் அரும்போர் ஆற்றி அழிந்தொழிந்தனவா? இல்லவே இல்லை. மாந்தன் தான் மாந்தனை அழித்து ஒழிக்கத் திட்டமிடுகின்றான். வெறியாளர்களை உடன் கூட்டிக் கொண்டு வீர நடைபோடுகின்றான். நாடு நகரங்களைப் பாழாக்கி நலிவூட்டு கின்றான். வளந்தரும் வயலையும், நீர் பெருக்கும் அணையையும், பயன்மிகு பாலத்தையும், கனி தரும் காவையும், பயிலும் பள்ளியையும், வழிபடும் கோவிலையும், உயிரூட்டும் மருந்தகங் களையும் பாழாக்குகிறான். பாவி! பாம்பும், பாழும் விலங்குகளும் செய்யாச் செயல்களைப் பகுத்தறிவுடைய மாந்தன் செய்கின்றான். பாவி அல்லனோ அவன்?

உரிமை உண்டா? :

உயிர்களைப் படைக்க முடியாத அவனுக்கு உயிர்களை அழிக்க என்ன உரிமை உண்டு? காலும், கையும், கண்ணும், காதும், மூக்கும், பல்லும் சிதைந்து, மூளை ஒழுகி உதிரம் பெருகிக் கிடக்கும் கொடுங்காட்சியைக் கண்டு உள்ளம் குளிர்ந்து கூத்தாடுகின்றானே போர்வெறியன்! இவன் மாந்தன் தானா?