உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவிளையாடல் கதைகள்

163

தன் படைத்தலைவன் சுந்தரசாமந்தன் என்பானுக்குக் கட்டளையிட்டான். தன் கருவூலத்தில் இருந்த பணத்தை வேண்டுமட்டும் எடுத்துக் கொள்ளவும் ஆணை தந்தான்.

சாமந்தன் மிகுந்த கடவுட் பற்றாளன். கருவூலப் பணத்தையெல்லாம் எடுத்துப் படையைப் பெருக்குவதற்கு மாறாகக் கோயில் திருப்பணிகளிலேயே செலவிட்டான். படைகள் வாராமையையும் கோயிற்பணியில் பணம் செலவழிக் கப்படுவதையும் அறிந்த பாண்டியன், மறுநாள் காலைப் பொழுதுக்குள் படையைக் காட்டியாக வேண்டும் என்று கட்டளையிட்டான். சாமந்தன் செய்வதறியாது இறைவனிடம் வேண்டினான். "நீ வேந்தனுடன் போய் இரு! நாம் படையுடன் வருவோம்" என்று இறைவன் கூறினான். தன் கணங்களைப் படையாக்கித் தான் படைத்தலைவனாகிப் பாண்டியன்முன் சென்றான் இறைவன். படைகளைக் கண்டு மகிழ்ந்தான் பாண்டியன். அப்பொழுதில் சேதிராயனைப் புலியொன்று கொன்றதாகச் செய்தி வந்தது. "இனிப் படைகள் வேண்டா! அவரவர் இடங்களக்குப் போக விடுக்க" என்றான் பாண்டியன். படைகள் மறைந்து சிவகணங்களாயின.

31. உலவாக்கிழி அருளியது

குலபூடண பாண்டியன் சிவநெறி வழுவாமல் காத்தான். எனினும், வேத வேள்வி செய்வாரைப் போற்றாதிருந்தான். அதனால் மழை பெய்யாமல் வளம் குறைந்தது. வேதம் வல்லார் வேற்று நாடுகளுக்குச் சென்று வேறு தொழில் செய்து பிழைக்கலாயினர். இவற்றை அறிந்த பாண்டியன் வருந்தினான். இறைவனை வேண்டி அருள்செய்யுமாறு வழிபட்டான்.

இறைவன் பாண்டியன் கனவில் தோன்றி, மறையின் சிறப்பையும், மறையோர் சிறப்பையும், அவற்றை அறியாமல் செய்த பிழையால் நேர்ந்த கேடுகளையும் தெரிவித்தான். மறையோரை அழைத்துப் போற்றுவதற்காக, என்றும் தீர்ந்து போகாத பணமுடிப்பையும் அருளினான்.

கனவு நீங்கி விழித்த பாண்டியன் மெய்யாகவே தன்கையில் பணமுடிப்பு இருக்கக் கண்டு வியப்புற்றான். வேற்று நாடுகளுக்குச் சென்ற வேதியர்களையெல்லாம் அழைத்துவரச் செய்து வேள்விகள் புரிந்தான். மீண்டும் முன்னைப் போலவே நாட்டில் மழை பெய்து வளம் சிறந்தது.