166
—
இளங்குமரனார் தமிழ்வளம் 31
அடைந்து வேண்டி நின்றான். "நீ போருக்குச் செல்! உனக்கே வெற்றியுண்டாகும்" என்று இறைவன் அருளால் உருவிலியுரை உண்டாயிற்று.
போர் இருபக்கப்படைகளுக்கும் கடுமையாக நடந்தது. வெயிலும் மிகக் கடுமையாக இருந்தது. இறைவன் ஒரு முனிவர் வடிவில் பாண்டியன் படைக்கு நடுவே புகுந்து தண்ணீர்ப்பந்தல் வைத்து நீர்வேட்கையைத் தீர்த்தான். இறைவன் வழங்கிய நீரைப்பருகிய வீரர்கள் மிகவலுவுடன் போரிட்டனர். காடு வெட்டிய சோழனும் இராசசிங்க பாண்டியனும் சிறைபிடிக்கப் பட்டனர். சோழன்படை தோற்று ஓடியது. பாண்டியன் சிறை பிடித்தவர்களைப் பொறுத்துக் கொண்டு விடுதலை செய்தான். 36. இரசவாதம் செய்தது
திருப்பூவணத்தில் பொன்னையாள் என்னும் கணிகை ஒருத்தி இருந்தாள். அவள் கடவுட்பற்றில் சிறந்தவர். திருக்கோயில் தொண்டு சிறப்பாகச் செய்து வந்தாள். சிவனடியார்களுக்கு வேண்டுவன தந்து உதவினாள்.
ஒரு நாள் சிவனடியார் சிலர் பொன்னனையாள் வீட்டுக்கு விருந்தினராக வந்தனர். அவருள் இறைவனும் ஒரு சித்தர் வடிவில் வந்தான். அனைவரையும் பணிப்பெண் அழைத்து விருந்து செய்தாள். சித்தர்வடிவ இறைவன் மட்டும் விருந்து உண்ணாமல் "உன் தலைவியை வரச்சொல்" என்றான். பொன்னனையாள் சித்தர் முன்வர, அவள் மெலிவைக் கண்டு' ஏன் மெலிந்துள்ளாய்? என வினாவினார் சித்தர். "சொக்கர் பெருமான் திருவுருவைப் பொன்னால் செய்யவேண்டும் என்று விரும்பினேன், எவ்வளவு முயன்றும் அதற்குரிய பொன் இன்னும் சேராமையால் அக்கவலை வாட்ட மெலிவுற்றேன்" என்றாள். 'உன் வீட்டில் இருக்கும் வெள்ளி, பித்தளை, வெண்கலம் முதலிய பொருள்களையெல்லாம் கொண்டுவா; நாம் பொன்னாக்கித் தருவோம்" என்றார் சித்தர். பொன்னனை யாள் மகிழ்ந்து அவ்வாறே செய்யவும் சித்தர் எல்லாவற்றையும் பொன்னாக்கித் தந்துவிட்டு மறைந்தார். அவர் இறைவனே என மகிழ்ந்த பொன்னனையாள் மதுரைக்கு வந்து இறைவன் வடிவைப் பொன்னால் செய்து வைத்துப் பூரித்தாள். இறைவன் திருவிளையாடலால் பொன்னனையாள் புகழ் எங்கும் பரவுவதாயிற்று.