உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூலாசிரியர் முன்னுரை

தமிழ் வளர்த்த மதுரைக்குச் சமய வளர்ச்சியிலும் பெரும் பங்குண்டு. 'கோயில் மாநகர்' என்னும் அதன் பெயர் சமயத்திற்கும் அதற்கும் உரிய தொடர்பைப் பெயரானே விளக்கவல்லது. மதுரை என்றாலே 'கோயில்' என்பதைக் காட்டிப், பழமைக்கும் பழமையாய்ப் புதுமைக்கும் புதுமையாய்ப் பொலிவோடு திகழ்வது. 'ஆலவாய் ஆவதும் இதுவே' என அதன் திருக்கோபுரத்தைக் கண்டு, தொலைவிலேயிருந்து வழிபட்ட ஆளுடைய பிள்ளையார் அருகணைந்து பதிகம் பாடி வழிபட்டார். அவர் காலத்திலேயே மதிலும் கோபுரமும் குறிக்கப் பெற்றிருத்தல், அதன் பழமைச் சான்று. அது பின்னே காலந்தோறும் கவினுற வளர்ந்து விரிந்தது. கோயில் வளர்ந்தது போலவே குடியிருப்பும் வளர்ந்தது. எனினும் அதன் பழைமையைப் பொலிவுறுத்துவது போலவே புதுமை வளர்ந்தமை வியப்புறத்தக்கதாம். இதற்குக் காரணம் பண்டே திட்டமிட்டு

அமைத்த பான்மையாம்.

மதுரைக் கோயில் வரலாறு முன்னரும் பலரால் வரையப் பெற்றதே; கட்டுரையளவிலும் வெளிப்பட்டதே எனினும் இவ்வரலாற்றின் நோக்கும் போக்கும் புதுமையானவை என்பதைக் கற்பார் அறிவர். மதுரைத் திருக்கோயிலை அறிந்தான் ஒருவன், புதிதாகக் காண வந்தான் ஒருவனுக்கு வழிகாட்டுவதாக அமைந்து உரையாடலாகவே செல்கின்றது. உரையாடல்முறை மேற்கொள்ளப் பெற்றமையால் தடைவிடைகளாகவும்,ஐய விளக்கங்களாகவும், நயம் பாராட்டலாகவும், ஒப்பீட்டு ஆய்வாகவும்,சுவை பயப்பதாகவும் செல்கின்றது.

திருக்கோயில் அமைந்துள்ள மன்பதை ஒழுங்குகள், மாக்கலைச் செல்வங்கள், மெய்ப்பொருள் நிலைகள் ஆகியன ஆங்காங்கே சுட்டப் பெறுகின்றன. வெறும் வரலாற்றுச் செய்தி களாக மட்டும் அமையாமல் தனித்தனிச் சிற்பச் சீர்மைகளும், மெய்ப்பாட்டுணர்வுகளும் கட்டுமான அமைப்புகளும் உளங்கொள கூறப்பெற்றுள. கோயிலார் கொள்ளவேண்டிய சீர்திருத்தங்களும் தக்கவாறு குறிக்கப்பெற்றுள.