உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

-

இளங்குமரனார் தமிழ்வளம் 31ஓ

தருதல் வேண்டுவது இல்லை' என்றும், 'அவ்வாறு கற்றுத் தருவது வடமொழி போன்ற உயர்மொழிகளுக்கு இழிவு செய்தலாம்' என்றும் ஆங்காங்கு வலியுறுத்தி, அரசப்பேராளர் வரை கொண்டு சென்றனர். மையச் சட்டப் பேரவையிலும் கல்லூரிகளில் தாய்மொழி நீக்கம் பற்றியும் தீர்மானம் கொணர்ந்தனர். அரசுப் பேராளர் இக்கோரிக்கையைச் சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு அனுப்பி அதன் கருத்தைத் தெரிவிக்குமாறு குறித்தார். பல்கலைக் கழகம், அதனைச் சென்னை ஆசிரியர் சங்கத்திற்கு அனுப்பியது. இஃதிவ்வாறு இருக்கத் தாய்மொழிக் கல்வி நீக்கம் குறித்து திரு.மு.சி. பூரணலிங்கம் பிள்ளையவர்கள் S. Padfield என்னும் புனைபெயரில் மெட்ராசுமெயில் (MADRAS MAIL) என்னும் ஆங்கில நாளிதழில் கண்டித்துப் பலகட்டுரைகள் எழுதினார். இதனால் கோரிக்கை தடைப்பட்டு விடக் கூடாதே எனத் தவித்த வடமொழி ஆர்வலர். அக்கட்டுரையாளரைக் கண்டு வயப் படுத்தவும் முயன்றனர்; குறுக்கு வழியாக விரைவில் சட்டமாக்கி விடும் முயற்சியிலும் ஊன்றினர், அந்நிலையில்தான் சென்னை ஆசிரியர் சங்கம் தன்கூட்டத்தைக் கூட்டி இரண்டு நாள்களில் கருத்துரைக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆட்பட்டது.

திரு. மு. சி. பூரணலிங்கனார், ஆசிரியர் சங்கத்திற்குச் செய்திவந்ததை அறியார். அவர் தம்பணியாகச் சென்னையில் இருந்து கோவைக்குச் சென்றிருந்தார். செய்தியை அறிந்து கொண்ட பரிதிமாற் கலைஞர், பூரணலிங்கனார்க்குத் தொலைவரிச் செய்திதந்து, சென்னைக்கு அவரை வருவித்து நிகழ்ச்சியை எடுத்துரைத்தார். உடனே இருவரும் ஆசிரியர் சங்க உறுப்பினர்களையும் பொறுப்பாளர்களையும் வீடுவீடாகச் சென்று பார்த்துத் தாய்மொழியைக் கல்லூரியில் இருந்து நீக்கக் கூடாது என்பதனை வற்புறுத்தினர். அவ்வழைப்பு வீணாகி விடவில்லை. ஆசிரியர் சங்கத்தார் 'தாய்மொழிப் பாடம் கல்லூரியில் கற்பிக்கப் பெறவேண்டியது கட்டாயமே' எனத் தீர்மானித்துப் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பினர். அவ்வளவில் விட்டுவிடின், 'வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறியது' என்னும் நிைைம ஏற்பட்டுவிடக்கூடும் என அஞ்சிய பரிதிமாற் கலைஞரும், பூரணலிங்கனாரும் மதுரைக்கு விரைந்தனர்; தமிழ்ச் சங்கத் தலைவர் பாண்டித்துரையைச் சந்தித்து உரையாடினர். அவர்தம் செல்வாக்கைக் கொண்டு 'கல்லூரிகளில் தாய்மொழி, கட்டாயம் கற்பிக்கப் பெறுதல் வேண்டும்; நீக்கப் பெறக்கூடாது' என்பதை வலியுறுத்த வேண்டினர்.