உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லாவின் கதைகள் முப்பது

என்ன செய்வது? ஒன்றும் புரியவில்லை!

131

முல்லா அறிவாளி என்பதை அரசர் ஏற்றார்! அவையோர் ஏற்காமல் இருப்பரா?

ஒரு சொல்லைச் சொல்லவேண்டுமானால் அதனை வெல்லுஞ் சொல் இல்லாமல் சொல்லுக என்றார் வள்ளுவர். அப்படிச் சொன்னார் முல்லா.

8. வெள்ளைக் காக்கை

முற்கால நாடகங்களில், அரசர் வருவார். அவர் மேடைக்கு வந்ததும் அமைச்சரை அழைப்பார். "அமைச்சரே! மாதம் மும்மாரி பொழிகின்றதா?" என்பார்."ஆமாம் அரசே, மாதந் தவறாமல் மும்மாரி பொழிகின்றது" என்பார் அமைச்சர். நாட்டில் மழை பொழிந்ததுகூடத் தெரியாமல் அமைச்சரிடம் கேட்டுத் தெரிந்து கொண்ட அரசர்களின் ஆட்சி எப்படி இருந்திருக்கும்?

அரசர்கள் என்ன நினைக்கிறார்களோ, என்ன விரும்பு கிறார்களோ அதற்குத் தக்கபடி பேசி அரசர் பாராட்டுதலையும் நல்லெண்ணத்தையும் பெறுவது பிழைக்கத் தெரிந்த அமைச்சர் களின் நடைமுறையாக இருந்தது.நாடு எக்கேடு கெட்டால் என்ன? மக்கள் எப்பாடு பட்டால் என்ன? அரசர் எப்படி ஆனால் என்ன? அவரவர் பாடு கொண்டாட்டமாக இருந்தால் போதும் என்று எண்ணிவிட்டவர்களிடம் வேறென்ன எதிர்பார்க்கமுடியும்?

அமைச்சரே, அதோ பறக்கிறது, வெள்ளைக் காக்கை அல்லவா?" என்பார் அரசர்.

"ஆமாம் அரசே! வெள்ளைக் காக்கைதான்; பளபளவென்று பட்டொளி வீசுகிறது, பார்த்தீர்களா?" என்று மறுமொழி கூறுவார் அமைச்சர்.

அரசர், "அமைச்சரே கூர்மையாகப் பாரும்; அந்த காக்கை கறுப்பாக வல்லவோ தெரிகிறது," என்றால், “ஆமாம் அரசே! கறுப்புத்தான்; கன்னங்கறேல் என்று தெரிகின்றதே" என்பார் அமைச்சர். இப்படி 'ஆமாம்' போடும் 'பூம்பூம்' மனிதர்களைப் பற்றிக் கதை கதையாக நம் நாட்டில் செய்திகள் வழங்குகின்றன. முல்லாவின் கதையொன்றும் இச் செய்தியைக் குறிக்கின்றது: