உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

இளங்குமரனார் தமிழ்வளம்

34

பருவம் பின்னது. அகவுணர்வு மேம்பாட்டுக்கு அகவையும் அடிப்படையாய் அமைதல் வேண்டும் என்பதைத் தெளிவாக விளக்கும் குறிப்புகள் இவை.

மனத்துக்கண் மாசின்மையே அறமென வள்ளுவர் வகுப்பராகலின் இளையரையும் மூதிளையரையும் குறித்தார்.

“அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்"

ஆகலின் அவற்றின் ஆட்சி இல்லாப் பருவத்தைத் தெளிந்து 'ஞான சபை'க்குள் புகத் தகுவாரை வரம்பிட்டுக் காட்டினார்.

திருவாயிற் புறத்தில் இருந்து வழிபடுவார் தன்மை ஆரவாரத்ததாய் அமைதல் கூடாது என்பதில் எவ்வளவு விழிப்பாக அடிகளார் விளங்குகிறார் என்பது "புறத்தில் நின்று பரிசுத்தராய் மெல்லெனத் துதி செய்தல் வேண்டும்" என்பதால் விளங்கும்.

ஆனால் இற்றை நிலை என்ன? வள்ளலார் வாய் மொழிப்படி வழிபாடு வழக்கில் உள்ளதா? வள்ளலார் வாழ்ந்த நாளிலேயே ஆர்வலர் எண்ணம் தடம் புரண்டது என்பதையும் வள்ளலார் தடுத்தாட் கொண்டார் என்பதையும் அறிகிறோம்.

'வள்ளலாரிடம் சேர்ந்திருந்த கூட்டங்களில் ஒரு சிலர் தோத்திரம் செய்யும் காலத்தில் பிடில் மத்தளம் முதலியவற்றை வைத்துக் கொள்ளுதலும் ஆராதனை செய்யும் காலத்துப் பலவிதமான கோஷங்களுடன் கூச்சல் போடுதலும் பிரம்மதாளம் நகார் கண்டாமணி நாதசுரம் முதலிய ஒலிக்கருவிகளை வைத்துக் கொள்ளுதலும் செய்தனர். அவற்றைக் கண்ட நம் ஐயா அவர்கள் பெரிதும் மனம் வருந்தி அவர்களை 'நீங்கள் செய்யும் இக் காரியங்கள் எல்லாம் சன்மார்க்கத்திற்கு முற்றிலும் மாறானவை என்பதை நீங்கள் அறிய வேண்டும். மன நெகிழ்ச்சி யோடு ஆண்டவனுடைய தோத்திரங்களை அமைதியாக அன்போடு பாடுவதுதான் சன்மார்க்கத்தின் முக்கிய லக்ஷியத் திற்கு முற்றிலும் உடன்பாடானது என்பதையும் அறியவேண்டும்; அறிந்து இவைகளை அறவே விட்டுவிடவேண்டுவதே உங்கள் கடமை' எனக் கண்டிப்பாகத் தெரிவித்தார்கள். அன்றிருந்து அவ் வீணாடம்பரங்கள் எல்லாம் அறவே ஒழிந்தன (திருவருட் பிரகாச வள்ளலார் திவ்விய சரித்திரம் 116-7).