உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலம்தோறும் குறள்பெறும் விளக்கம்

ச.மெய்யப்பன், எம்.ஏ.,

அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

தமிழ் நிலம் தொன்மையானது. தொன்றுதொட்டு சான்றோர்கள், புலவர்கள், கவிஞர்கள் தம் சிந்தனை வலிமையால் தமிழுக்கு வளம் சேர்த்தனர். இந்நிலத்தில் எழுந்த சிந்தனைகள் மனிதகுல சிந்தனை வளத்துக்கு எந்த வகையிலும் குறைந்தவை அல்ல. நன்கு ஆராய்ந்தால் சில துறைகளில் உயர்ந்த தரத்தினை உடையனவாய் அமைந்துள்ளன. நீண்ட நெடிய வரலாறு உடைய தமிழில் காலம்தோறும் சிந்தனையாளர்கள் தோன்றி, மொழிக்குக் கருத்துவளம் நல்கி உள்ளனர். காலங்காலமாக வளர்ந்து வரும் சிந்தனை ஓட்டத்தில், திருவள்ளுவர் தன் சிந்தனை வளத்தால் தனிச் சிறப்பிடம் பெறுகிறார். தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள் ஒரே குடும்ப நூல் என்று சொல்லும் வகையில் சொல், சொல்லாக்கம், தொடர், சொற்றொடராக்கம், கருத்துக்கள், உவமைகள் ஆகியன ஒத்த தன்மை உடையனவாக அமைந்துள்ன. நுண்ணாய்வு செய்வோர்க்கு இவற்றின் உயிர்ப்பும் ஒருமைப்பாடும் தெளிவாகப் புலப்படும்.

திருவள்ளுவர் மூத்த சிந்தனையாளர். அனுபவச் செல்வர். அருங்கருத்துக்களை சொற்செட்டுடன் - யாப்புக் கட்டமைப் புடன் சூத்திரம் போல் சிறிய வடிவில் பெரு நூல் செய்த பெரியார். வள்ளுவரின் சிந்தனை வளம் வையகத்தை வாழ்விப்பது; வழிகாட்டுவது காலந்தோறும் வளர்வதற்கேற்ற வளர்ச்சிக் கூறுகளைத் தன்னகத்தே கொண்டது குறள். திருக்குறள் உயிர்ப்பு பரவாத தமிழ்நூலே கிடையாது; இதன் ஒளி தமிழ் இலக்கியம் முழுவதிலுமே ஊடுருவிச் சென்றுள்ளது. காலந்தோறும் தோன்றும் கவிஞர்கள் திருக்குறளை எடுத்தாண்டுள்ளது எல்லோரும் அறிந்ததே. எனினும், திருக்குறளின் செல்வாக்கு தமிழ் இலக்கியம் முழுதும் புதைந்துள்ள பாங்கு இந்நூலில் விளக்கப் பெறுகிறது.