உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

-

இளங்குமரனார் தமிழ்வளம் 349

இது ஒப்பாய்வு ஊழி. ஒரு கருத்து காலந்தோறும் பெறும் மாற்றம் - வளர்ச்சி ஒப்பாய்வால் ஒளி பெறுகிறது; கருத்தும் விளக்கம் பெறுகிறது. திருக்குறள் என்னும் தங்கக்கட்டி திருவருட்பாவில் தங்கநகையாக, அழகுமிக்க அணிகலனாக விளங்கும் திறன் இந்நூலில் விளக்கப் பெறுகிறது. வள்ளலார் உணர்ச்சிக் கவிஞராதலால் திருக்குறள் கருத்துக்களைச் சிறந்த ஓவியமாக வரைந்துள்ளார். குறளோவியத்திற்கு திருவருட்பா பாடல்கள் விளக்கமான பெரிய ஓவியங்கள் என்றே கொள்ளலாம். திருக்குறளைப் பதப்படுத்தப்பட்ட கரும்புச்சாறு என்றால், திருவருட்பாவை எல்லோரும் எளிதில் பருகக் கூடிய இன்சுவை நீர் என இயம்பலாம்.

திருக்குறள் நிலத்தில் புதைந்துள்ள கருத்து மணிகளை வள்ளலார் தம் பாடல்களில் வெளிக்கொணருகிறார்; திருக்குறளுக்கு விளக்கம் தருகிறார். திருவருட்பாவை வள்ளலார் கண்ட முறையும் அனுபவித்து உண்ட முறையும் இந்நூலில் திறனாய்ந்து தெளிவு செய்யப் பெற்றுள்ளது. வள்ளலார் மொழிநடையோ எழுதப் படிக்கத் தெரிந்த எல்லார்க்கும் விளங்குவது. வள்ளலார் தமிழ் மக்கள் தமிழ்; பொதுத் தமிழ் வள்ளுவரின் அருங்கருத்துக்களை, வாழ்க்கைச் சட்டங்களை உயர்தரும நெறிகளை வள்ளலார், தேனில் ஊறிய பலாச்சுளை போல மிகச் சுவையாக விளக்குகிறார். திருக்குறள் வித்துக்கள் எவ்வளவு பெரிய மரமாக விசுவரூபம் எடுத்துள்ளது என்பதை இந்நூலாசிரியர் விளக்குகிறார். குறிப்பாக, வள்ளுவரின் கடவுட் கொள்கை, தத்துவம், உயிருடல் நிலையாமை, மெய்யியல் பற்றிய கருத்துக்களை வள்ளலார் மிகமிக எளிமையாகக் கூறும் திறம் இதில் ஆராயப் பெறுகிறது.

தமிழருடைய மெய்யியல் கோட்பாடு வரலாறு எழுதுங்கால், வள்ளுவர் தொடங்கி வள்ளலார் வரை வளர்ந்த வகையினை ஆராய்வார்க்கு இவ்வகை நூல்கள் பெரிதும் துணை நிற்பன.

ஆசிரியர் இளங்குமரன் இலக்கியப் பயிற்சி மிக்கவர். இவருடைய கல்விப் பரப்பு, அணுகுமுறை, ஆய்வுநெறி, வளமான தமிழ் நடை, மெய்யில் புலமை, மேன்மை மிகு அறவாழ்வு -இவை இந்த ஒப்பாய்வு நூலுக்கு ஒளி சேர்க்கின்றன.

இந்நூலாசிரியர் எதனையும் ஆய்ந்துதான் எழுதுவார் என்பதும், இவர் காய்தல் உவத்தல் அகற்றி ஆய்பவர் என்பதும்,