உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வழியில் வள்ளலார்

3

அரிய ஆய்வு முடிவுகளைக் கூறுபவர் என்பதும், தமிழ் மரபு அறிந்தவர் என்பதும், தமிழ் மரபு காப்பவர் என்பதும், தமிழ்நலம் ஒன்றே பேணுபவர் என்பதும் நாடறிந்த உண்மை. இவர் படைத்த பல நன்நூல்கள் இவற்றிற்குச் சான்று பகர்வன; இக்கருத்துக்கு அரணாக அமைவன.

இவர் சொல்லாராய்ச்சி வல்லுநர்; அடிச்சொல் ஆய்வில் ஆழங்கால் பட்டவர். ஆதலால் சொற்களில் உண்மைப் பொருளும் பொருளின் ஆழமும் கருத்து வீச்சும் கருத்து வளமும் சொற்கள் காலந்தோறும் பெறும் மாற்றமும் அவற்றின் விளைவும் இந்நூலில் நுட்பமாக விளக்கப் பெற்றுள்ளன. இவ்வகைத் திறனாய்வு நூல்கள் ஆசிரியரின் புலமை நலத்திற்கும் ஆய்வுவன்மைக்கும் பெருமை சேர்ப்பதோடு, வள்ளலாரை விளங்கிக் கொள்வதற்கும் வகை செய்யும் என்பது என் கருத்து. வள்ளுவர், வள்ளலார் இருபெரும் சிந்தனையாளர்களின் சிந்தனைச் செழுமையைப் புரிந்து, பயன் கொள்ள இந்நூல் உரை விளக்கமாகும்.