உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228

இளங்குமரனார் தமிழ்வளம் - 34 ஓ

உண்டாவது சகோதர உரிமை ஆதலின், ஒரு சீவன் துக்கத்தை அநுபவிக்கக் கண்டபோதும் துக்கப்படுமென்றறிந்த போதும் மற்றொரு சீவனுக்கு உருக்கமுண்டாவது பழைய ஆன்ம உரிமை யென்றறிய வேண்டும் என்கிறார்.

சிலருக்கு ஆன்ம உருக்கம் இல்லையே எனின், "தமது சகோதரர் என்னும் ஆன்ம அறிவு என்கிற கண்ணானது அஞ்ஞான காசத்தால் மிகவும் ஒளி மழுங்கின படியால் ' கண்டறியக் கூடியதில்லையாய் ஆயிற்று என்கிறார்.

சீவகாருணிய ஒழுக்கம் என்னும் நூல் சத்திய தருமச் சாலையை நிறுவியபோது, அதன் நோக்கமாகிய சன்மார்க் கத்தை விளக்குவதற்காக அடிகளால் உபதேசிக்கப்பட்டது என்றும், இதுவே அடிகளாரின் முதன்மையான சாத்திர நூல் என்றும் வள்ளலார் வாழ்வராய், வள்ளலார் படைப்புகளின் பதிப்புக் கொடைஞராய்த் திகழ்ந்த பாலகிருட்டிணர் பகர்கிறார்.

சீவகாருணிய நூற் சுருக்கம் :

ஆன்மலாபம் அடைவதற்காகவே பிறப்பு கடவுளால் கொடுக்கப்பட்டது.

கடவுளின் பூரண இயற்கை இன்பத்தைப் பெறுவதே ஆன்மலாபம்.

கடவுளின் இயற்கை விளக்கத்தைக் கொண்டே அதனை அடையக்கூடும்.

கடவுளின் இயற்கை விளக்கத்தைச் சீவகாருணிய ஒழுக்கத்தாலன்றி வேறெந்த வழியாலும் பெற இயலாது. சீவகாருணிய ஒழுக்கம் என்பது சீவர்களுக்கு சீவர்கள் விஷயமாக உண்டாகின்ற ஆன்ம உருக்கத்தைக் கொண்டு தெய்வ வழிபாடு செய்து வாழ்தல்.

சீவர்கள் எல்லாம் ஒத்த உரிமையுள்ள சகோதரர்கள். ஆதலால் ஒரு சீவனுக்குத் துக்கம் உண்டாகும் போது மற்றொரு சீவனுக்கு உருக்கம் உண்டாகும்.

பசி, கொலை முதலியவைகளால் வரும் துயரங்களை நீக்கத் தக்க அறிவும் உரிமையும் இல்லாத சீவர்கள் விஷயத்தில், அவற்றை நீக்கத்தக்க அறிவும் உரிமையும் உள்ள சீவர்கள் வஞ்சியாமல் தயையினால் நீக்குவதே சீவகாருணியத்தின் முக்கிய இலட்சியம்.