உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. வள்ளுவரும் வள்ளலாரும்

வள்ளுவரும் வள்ளலாரும் தமிழ்நாடு நன்கு அறியப்பட்ட பெருமக்கள். வள்ளுவர், உலகோர் உள்ளங் கவர்ந்த ஒரு பேர் அறவோர்; வள்ளலாரும், அவ்வாறு உலகோர் உள்ளங்களிலெல்லாம் வீற்றிருக்கத்தக்க பெருமகனாரே!

வாழ்வுக் குறிப்பு

வள்ளுவர் வாழ்வினைக், காலத்திரை மறைத்து விட்து; அவரோ பிறரோ அவர் வாழ்வினை அக்காலத்தே குறித்தார் அல்லர். பின்னாளில் குறித்தோர், புனைவிலேயே வள்ளுவர் வாழ்வைப் படைத்துக் கொண்டனர்.

வள்ளலார் வாழ்வு காலத்திரையால் முற்றிலும் மறைந்து போகாத அண்மைக் காலத்தில் நிகழ்ந்தது. ஓரிரு வழிமுறை களுக்கு முற்பட்டது. அவரொடு தொடர்பு கொண்டவர்களின் வழிமுறையினரும், தொடர்பு கொண்ட இடங்களும் நம் கண் காணச் சான்றாக விளங்குதல் உண்மை. ஆதலின் அவர் வாழ்வைப் பற்றிய குறிப்புகள் நமக்கு வாய்த்துள. அவற்றுள்ளும் புனைவு இல்லாமல் இல்லை.

வாழ்வுச் சான்று

வள்ளுவர் வாழ்வியலுக்கு வாய்த்த ஒப்பிலா ஒரு சான்று, திருக்குறளே. இன்னொரு சான்று அவர் வாக்கைத் தம் நூல்களில் பதித்துப் பொன்னே போல் போற்றிக் கொண்டோர் சான்றே! வள்ளலார் வாழ்வியற் சான்று, அவர் பாடிய திருவருட்பா அளவில் நின்றுவிடவில்லை. அவ்வக் காலத்து, அவர்தம் தொடர்பாளர்களுக்கு எழுதிய கடிதச் சான்றுகள் உள. அவரொடு தொடர்பு கொண்டவர்கள் அவருக்கு எழுதிய கடிதச் சான்றுகள் உள. அவரால் நிறுவப்பட்ட நிறுவனச் சான்றுகளும் நேரில் உள. இவற்றின் மேல் அந்நாள் அரசுப் பதிவுச் சான்றுகளும் உண்டு!