உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. முகவாய்

'பெரும் பொருள் விளக்கம்' என்பது 'மறைந்து போன தமிழ்நூல்கள்' என்னும் பட்டியலில் அடங்கிய நூல்களுள் ஒன்றாகும். சீவக சிந்தாமணி, நாமகள் இலம்பகம், 'மருமகன் வலந்தது' என்னும் பாடல் விளக்கத்தில், உரையாசிரியர் நச்சினார்க்கினியர்' 'பெரும் பொருள்' என்று குறிப்பிடுகிறார் (187)

'பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே' (தொல். களவு 14) என்பதனான் ஒப்பும் பெருந்திணைப் பாற்படுங் கந்தருவமாமாறு பெரும் பொருளான் உணர்க' என்பது அது.

பெரும் பொருள் என்பதற்குக் குறிப்பு வரையும் பெரும் பேராசிரியர் உ.வே.சாமிநாதர், 'பெரும் பொருள் என்பது, பெரும் பொருள் விளக்கம் என்னும் நூலாக இருத்தல் கூடுமோ வென்று ஊகிக்கப்படுகின்றது' என்கிறார்.

'ஊகித்தல்' என்பது உறுதி செய்ய முடியாத கருதுகோள் ஆகும். அதனை உறுதிசெய்ய உதவியது புறத்திரட்டு என்னும் அரிய தொகை நூலாகும்.உ.வே.சா. அவர்களின் சிந்தாமணிப் பதிப்பு, 1887 இல் வெளிவந்தது. அப்பொழுது அவர்க்குப் புறத் திரட்டுப் படி கிடைக்கவில்லை. பின்னர்த் திருச்சிராப்பள்ளி அண்ணாசாமி என்பாரிடமிருந்து புறத்திரட்டு ஏட்டுப்படி பெற்றுக் கொண்டதை 'என் சரித்திரத்தில்' குறிப்பிடுகிறார். (921) புறநானூற்றுப் பதிப்புக்குப் புறத்திரட்டிலுள்ள புறநானூற்றுப் பாடல்கள் உதவியதையும் உரைக்கிறார் (என் சரித்திரம் 986). இவையெல்லாம் சிந்தாமணிப் பதிப்பின் பின் நிகழ்ந்தவை.

1938-இல் பேராசிரியர் ச.வையாபுரியாரால் புறத்திரட்டுப் பதிப்பு வெளியிடப்பட்டது. அப்பதிப்பே 'பெரும் பொருள் விளக்கம்' என்பதைத் தெளிவு படுத்திற்று.

ஒரு தொகை நூல் எத்தகு கட்டொழுங்குடன் விளங்க வேண்டும் என்பதற்கு எடுத்துக் காட்டாகத் திகழ்வது புறத்திரட்டு