உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழிவாளன் புகல்வு

பரிபாடல் சங்கத் தொகை நூல்களுள் ஒன்று; பரிபாடல் என்னும் பாவால் அமைந்தது. 70 பாடல்களைக் கொண்டிருந்த அந்நூலில் 24 முழுப்பாடல்களும் சில உதிரிப் பகுதிகளுமே கிடைத்துள்ளன.

பரிபாடலில் வையை, திருமால், செவ்வேள் (முருகன்) பற்றிய பாடல்களே மிக்கிருந்தன. கிடைத்துள்ள பாடல்களில் செவ்வேள் பற்றிய பாடல்கள் 8. அவற்றைப் பற்றிய ஆய்வே இந்நூல்.

பரிபாடல் இசைப்பாடல். இதனைப் பண் வகுத்துப் பாடினர் என்றும், பண்வகையாலேயே நூலை அடைவு செய்தனர் என்றும், அறிய முடிகின்றது. தேவாரத்திற்குப் பண்ணடைவு முறை உண்டு. அம்முறைக்கு முன்னோடி இப்பரிபாடலாகும்.

தொகை நூல்கள் எட்டனுள் பதிற்றுப்பத்தும் பரிபாடலும் செறிவு மிக்க சொல்லாட்சியுடையவை. பொருள் காண்டற்கு அருமை வாய்ந்தவை. எனினும், இரண்டற்கும் பழமையான குறிப்புரைகள் கிடைத்துள்ளமை நலஞ்செய்கின்றன. அவற்றைத் தழுவி உரைகளும் வெளிவந்துள்ளன.

பரிபாடலின் போக்கு ஒரு நெறிப்பட்டதன்று; அடிக்கு அடி, யாப்பியல் மாறிச் செல்வதும் அதன் இசைமுறை. எல்லாத் தளைகளும், எல்லாப் பாவமைதிகளும் இடம் பெற்றவை. அடியளவால் குறளடி முதல் கழிநெடிலடிவரை குறைந்தும் நிறைந்தும் செல்வதுடன், அடியின் எண்ணிக்கையாலும் சுருங்கியும் நீண்டும் செல்வது. ஆனால், பதிற்றுப் பத்தோ அடியளவால், ஒழுங்குடையது. அடி எண்ணிக்கை அளவால் கூட மிகச் சுருங்காதும் மிகப் பெருகாதும் டைநிலைப் பட்டதாய் இயல்வது.

பதிற்றுப்பத்து, அரசர் ஒருவர்க்குப் பத்துப்பாடலென வரம்புடையது. பரிபாடல், அவ்வரம்பற்றுப் பாடுபொருள் பற்றிய வரன்முறை விடுத்துப் பண்முறையிலேயே செல்லும் கட்டொழுங்குடையது.