உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிபாடலில் திருமுருகன்

53

முத்துப் பரலிட்ட பொற்சிலம்பு ஒலிக்க, துடிப்பறையுன் ஒலிக்கு ஏற்றவாறு அடிபெயர்த்து வைத்துத் தோளசைத்துக் களிப்புடன் ஆடும் விறலியின் அழகிலே தன்னை மறந்து நின்றான் ஒரு தலைவன். அவனை வயப்படுத்தித் தன்பால் திருப்ப விரும்பினாள் தலைவி, விறலியின் கண் வலையில் படுதலைக் கலைக்க விரும்பிய அவள், ஊடல் கொண்டாள்! கண் சிவப்பச் சினந்தாள். இவ்வூடலும் சினமும் பயன் தாரா என்பதை உணர்ந்தாள்போல் அவ்விறலியினும் தன்னை அழகுறுத்தி வெற்றி பெற எண்ணினாள். அதனால் கண்ணாடியை எடுத்து நோக்கித் தன் அணிகளைத் திருத்தினாள். மார்பில் இருந்த பழஞ் சந்தனத்தை உதிர்த்துப் புது நறுஞ் சந்தனத்தைப் பல்கால் அப்பி மணங்கமழச் செய்தாள். இவ்வாறு பன்முறையாக அவள் செய்த செய்கைகள் காண்பார் கண்ணில், ஓவியக்கலை வல்லான் ஒருவன் வனப்புறத் தீட்டிய ஓவியம் என்னத் தோன்றின.

"இவை இவை நினைப்பின் வல்லோன் ஓவத்தெழுதெழில் போலும்." (21:27-8)

என்கிறார் பாவலர். அவர் நல்லச்சுதனார் என்பார். வானியல் :

வானியற் கலையிலும் முந்தையோர் சிறந்திருந்தனர் என்பதைக் காட்டுகின்றது ஓவியக் காட்சிகளுள் ஒன்று.

"என்றூழ் உறவரும் இருசுடர் நேமி ஒன்றிய சுடர்நிலை"

என்பது அது. கதிரோனும் திங்கள் முதலிய கோள்களும் விண்மீன்களும் விளங்கும் சுடர்நிலை வட்டம் ஓவியமாகத் தீட்டப்பட்டிருந்ததாம். கதிரோன் செலவு, அதன் சுழற்சி அதன் கோள் வட்டம், காற்றின் இயக்கம் இன்னவெல்லாம் ஆங்காங்கே சென்று அளந்து அறிந்தவர்போலக் கூறுவாரும் உளர் என்னும் புறநானூற்றுச் செய்திக்கு அரண் சேர்ப்பதாக அமைவது இப்பரிபாடல் காட்டும் ஓவியக் காட்சியாகும்.

இவ்வாறு கலைமணம் கமழ்கின்றது பரிபாடல்