உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. செவ்வேள் பாடல்களில் இயற்கை வளம்!

செவ்வேள், குறிஞ்சி நிலக்கடவுள். மலைகிழவோன் என்னும் பெயரினன்! குன்றுதோறாடும் குமரவேள் எனவும் படுபவன். அவன் உறைதலால் பரங்குன்றம் 'செவ்வேள் பரங் குன்றம்' என்றும் சொல்லப்படுவதாயிற்று, எனக் கண்டுளோம். பரிபாடலில் குன்றம் பற்றிய பாடல்களில் இயற்கை வளம் அழகுறச் சொல்லப்படுகின்றது.

கார்த்தன்மை :

குன்றில் மழை வளமாகப் பெய்தது! அதனால் சுணைகளில் நீர்மிகப் பெருகியது. அப்பெருக்கால் மலர்க்காடே எனப் பூக்கள் மலர்ந்தன.

குளிர்ந்ததும் நறுமணமுடையதுமாம் கடம்ப மரங்களின் மலர்களில் புகுந்து வண்டுகள் இசைக்கும் இசை, பண்ணிசை போன்றது. குன்றச் சாரலில் வளர்ந்துள்ள மூங்கில்கள், திருக்கோயிலில் திறம்பட ஆடும் மகளிர் தோள் போன்றன. வாகை மலர் போலும் கொண்டையையுடைய மயில்களின் அகவுதல், பிரிந்து சென்ற தலைவரைக் காலம் தாழ்த்தாமல் வருக என்று அழைப்பவர் குரல் போன்றது.

கொன்றை மலர்கள் பொன் மாலையென மலர்ந்தன. வேங்கையின் மலர்கள் பாறைகளில் வீழ்ந்து அழுகின்ற குழந்தை களுக்குத் தாய்மார் 'புலிபுலி' என்று அச்சம் காட்டுமாறு பரவிக் கிடந்தன. நீர்நிலைகளின் பக்கங்களில் காந்தளின் கொத்துகள் மலர்ந்து வரிசையாய் விளங்க, மெல்லிய தோன்றியின் செந்நிறப் பூக்கள் அவற்றில் தாவிக் கிடந்தன. இவ்வாறு செவ்வேளுக்குரிய குன்றத்தில் கார்காலத் தன்மை சிறந்து விளங்கிற்று (14:1-17).

இக்கார்காலம் சிறந்து விளங்குதலைப் பதினெட்டாம் பரிபாடலும் விரித்துரைக்கின்றது: முன்பனிக் காலநிலையும் சொல்கின்றது.