உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

பரர் :

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

பரர் என்பார் அயலார்; அப்பாலார். 'பரர்க்கடிமை செய்திடோம்' என்பதில் அயலார் மட்டுமன்றிப் 'பகைவர்' என்னும் பொருளும் உளதாதல் அறிக. 'பரர்' என்பதற்குப் பகைவர் என்னும் பொருளதாதலைச் சூடாமணி நிகண்டு சொல்லும்:

“பரரொடு கேளார் ஒல்லார் பகைவர்பேர் எழுமூன்றாமே என்பது அது. (வ: 51)

பரல் :

பரவிக் கிடக்கும் முரம்பு நிலத்து அல்லது மேட்டு நிலத்துக் கல் பரல் எனப்படும். சுக்கான்கல், 'பரல்' என்பதும், வித்து, 'பரல்' என்பதும்,சிலம்பு, கழல் முதலியவற்றின் உள்ளிடு கல் ‘பரல்' என்பதும் அதன் வடிவொப்புக் கருதியதாம். பரற்கல் என்பது பருக்கைக் கல் எனவும் ஆளப்படும். பரல் என்பது நிலத்தைக் குறித்து வந்த பெயராயும், பருக்கை என்பது கல்லைக் குறித்து வந்த பெயராயும் அறியக்கிடக்கின்றன.

“முரம்பு கண்ணுடைந்த பரலவற் போழ்வில்”

என மலைபடுகடாமும் (198)

“வெயிலுருப்புற்ற வெம்பரல்”

எனச் சிறுபாணாற்றுப்படையும் (8) பரலைக் குறிக்கின்றன.

சிலம்பில் மணியும் முத்தும் பரலாக இடப்படும் என்பதைச் சிலப்பதிகாரம் காட்டும். பரவிச் சென்று ஒலியுண்டாக்கும் வண்ணம் இடைவெளி படக் கிடத்தலால் அவை 'பரல்' எனப்பட்டன எனக் கொள்ளக் கிடக்கின்றதாம்.

பரவக்காலி :

ஆடி ஓடித் திரியும் ஆடுமாடுகளைப் 'பரவக்காலி' என்பது நாட்டு வழக்கு. அவ்வாறு அலைந்து திரிவானும் 'பரவக்காலி' எனப்படுவான். அவ்வாறு அலைந்து திரியும் தன்மையும் 'பரவக் காலித்தனம்' எனச் சொல்லப்படும். இவை பொதுமக்கள் வழக்கில் உள்ளவை.

பரவயம் :

.

தன்னைப் பற்றிய கவலையில்லாமல் தன்னைச் சார்ந்ததன் அல்லது சார்ந்தவர் வண்ணமாகி மகிழ்வது 'பரவயம்' எனப்படும்.