உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

பருவத்திரட்சியொடும் கூடியது என்பதும் சொல்லமைப்பால் கொள்ளத் தக்கதாம். மகளிர், பருத்த தொடைப்புறம் குறிப்பது 'பருமம்' என்பது யாழ்ப்பாண அகராதி.

அரைப்பட்டிகையைக் குறிப்பது என்பது முருகாற்றுப் படை. அது பதினெட்டு வடங்கொண்டது என்னும் பருமை சுட்டியது என்பது அறியற்பாலது (146). களிற்றின் கழுத்து மெத்தை என்பது கலித்தொகை (97). குதிரையின் கலணை என்பது நெடுநல்வாடை (179).

பருமம் பருமை என்பது உலக வழக்கு, பருமன் என்பது அது. அம்பாரியைப் 'பருமக்கட்டு' என்றும் (உயுத். 3360) பிடரில் தவிசைத் தாங்கிய யானை "பருமயானை' என்றும் (அயோத். 2) கம்பரால் குறிப்பிடப்படும்.

பருமல் :

பருத்த மரக்கை பருமல் எனப்படும். பருத்தது பருமன் ஆதல் போலப் பருமல் எனப்பட்டதாம்.

கப்பலுக்குரிய குறுக்கு மரத்தின் கை பருமல் எனப்படும் என்பதைச் சுட்டுகிறது செ.ப.க. அகராதி.

பருமிதம் :

பெருமிதம் என்பது பெருமையாகவும் தன்னெடுப்பாகவும் இருநிலையில் அமையும். இப்பெருமிதம் பருமிதம் எனவும்படும். பருமிதம் மகிழ்வையும் குறிக்கும். பருமித்தல் என்பது அழகுறத்தல் பண்ணுறுத்தல் என்பவற்றைக் குறித்தல் 'பருமம்' என்பதன் வழியாக வரும் பொருளாம்.

"முத்தம் பருமித்திடைதேய்த்து" (கூர்ம. அந்தகாசு. 53)

“பருமித்த களிற்றி னானும்" (சிந்தா. காந்தரு. 20)

என்பவற்றை மதுரைத் தமிழ்ச்சங்க அகராதி எடுத்துக் காட்டும். பருமை :

பருமை என்பது பருத்திருத்தல், பெருமை என்பவற்றை வெளிப்பட உணர்த்தும். பருஞ்சோளம், பருங்கீரை, பருந்தேக்கு, பருநெல்,பருப்பொருள், பரும்படி, பருமட்டம், பருவட்டு, பருவுடல் இவ்வாறு பருமை சுட்டிய அடையாக வருவது பெருவழக்கு. 'பரு' 'பெரு' என்றும் ஆகும்.