உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியர் காலம்

ஐந்திரமும் வேற்றுமையும்

245

தொல்காப்பியர் ஐந்திரம் கற்றுத்தேர்ந்தவர். தம் இலக்கணத்தில் வேற்றுமை இயலின் தொடக்கத்தில்,

வேற்றுமை தாமே ஏழென மொழிய

என்றவர்,

விளிகொள் வதன்கண் விளியோ டெட்டே

என்று எட்டாக்குகிறார். எட்டாம்வேற்றுமை பெயரும், பெயரின் விகாரமும் ஆதலால், ஒன்றெனக் கொண்டவர் ஐந்திரத்தார் என்பதைச் சேனாவரையரும், நன்னூல் முதல் உரையாசிரியர் மயிலைநாதரும் சுட்டுகின்றனர்.

“ஏழியன் முறையது எதிர்முக வேற்றுமை வேறென விளம்பான்; பெயரது விகாரமென்று ஓதிய புலவனும் உளன்; ஒரு வகையால் இந்திரன் எட்டாம் வேற்றுமை என்றனன்”

என்னும் ஐந்திர நூற் கருத்தைச் சுட்டும் நூற்பாவைத் தொல்காப்பிய நூற்பாவொடு ஒப்பிட்டுக் காணுமாறு (மயிலை நாதரும் (நன்னூல்) சேனாவரையரும்) காட்டியுளர். ஆதலால், ஏழுவேற்றுமை எனக்கொண்ட தொல்காப்பியர், அதனொடு சாரத் தனி நூற்பாவால் விளி கொள்வதன்கண் விளியோடு எட்டே என ஏற்றார். இவ்வேற்பு ஐந்திரம் சார்ந்தது எனத் தெளிய வாய்க்கின்றது. தொல்காப்பியரின் ஐந்திரம் நிறைதலுக்குச் சான்றாகின்றது.

சொல் பகுநிலை

இனி மற்றொரு சான்று, ஐந்திரம் சொல்லின் முதனிலை, இடைநிலை, இறுதிநிலை பற்றிய பகுப்புகள் உடையது இல்லை. ஆனால், பாணினியம் அப்பகுப்புகளை உடையது. பாணினியத் திற்கு முனனவராகத் தொல்காப்பியர் இருந்தமையாலும் அவர் நிறைந்திருந்த ஐந்திரத்தில் அப்பகுப்பு இல்லாமை யாலும் தமிழ் மரபில் எல்லாச் சொல்லும் பொருள் குறித்த தனிச்சீர்மை இயற்கை நெறிப்பட அமைந்து கிடந்தமையாலும், அப்பகுப்பு தேவைப்பாடு அற்றதாய் இருந்ததால் வித்து வேர் முளை கிளை என விளங்கிய அளவில் நின்றது; இந்நெறியும் ஐந்திரம் கொண்டிருந்த நெறியாம்.