உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246

தமிழியம்

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

தமிழ் நெறியில் நூல்யாத்த தொல்காப்பியர் ஐந்திரம் கற்றதால் அதனை வழிமொழிந்தார் அல்லர். வழி மொழிந் திருப்பின் பொருளதிகாரம் என மூன்றாம் அதிகாரத் தமிழர் வாழ்வியல் பெட்டகம் நாம் காண வாய்த்திராது; பிறர் பிறரும் பின்னால் பொருள் இலக்கணம் (அகப்பொருள் புறப்பொருள்) வகுத்திரார். அகத்துறையும் புறத்துறையும் பாடுபொருளாகிப் பாட்டு தொகை எனக் கையில் கனியாகத் தவழ்ந்திருக்க நேர்ந்திராதாம்.

இவ்வைந்திரம் பற்றிச் சிலப்பதிகாரம், விண்ணவர் கோமான் விழுநூல்"

66

என்றும்,

“கப்பத் திந்திரன் கட்டியது”

என்றும் குறிக்கின்றது. ஐந்திர நூல் காலம்

ஐந்திர நூலைக் கேட்டவருள் ஒருவர் அருகதேவர் என்றும், அவர்க்கு இந்திரன் ஓதினான் என்றும் அருக நூல்கள் கூறுகின்றன. ஆகலின், அந்நூல் அவர் காலத்திற்கு முன்னரே இயற்றப் பட்டிருக்கவேண்டும். அவர்காலம் கி.மு.599-527 என்பர். அவர்தம் ஐந்திரக் கேள்வி அகவை முப்பதில் என்றால் கி.மு. 569 இல் கேட்டாராதல் வேண்டும். அந்நூல் அக்காலத்திற்கு முன்னர் இயற்றப்பட்டிருக்க வேண்டும்.

இனி, அருக சமயம் புத்தசமயம் பற்றிய செய்திகள் எவையும் தொல்காப்பியத்தில் இடம் பெறவில்லை. அன்றியும் தொல்காப்பியர் கூறிய மக்கள் தாமே ஆறறிவுயிரே என்னும் மன அறிவுக் கொள்கை அருக சமயத்தார் ஏற்பது அன்று. நன்னூலார் அருக சமயத்தார் ஆதலால், அவர் ஐயறிவுக் கொள்கை அளவிலே நின்றமைகொண்டு அறியலாம்.

இவற்றால் அருகர், புத்தர் ஆகிய இருவரும் அறவுரை கூறிப்பரப்பிய காலத்திற்கும் -கி.மு. ஆறாம் நூற்றாண்டு நடுப்பகுதிக்கும் முற்பட்டு இருந்தவர் தொல்காப்பியர் எனக் கொள்ளல் முறையாம். ஒரு காலத்தவர் எனினும் அக்கொள்கை உடன்பாடு இருப்பார் அன்றிப் பிறர் கூறாரே!