உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குதம்பைச் சித்தர்

131

வைக்கோற்போரிலே போட்ட ஊசியைத் தேடுவது போல்வதாம். உலகப்பொருட் குவியலுள்ளே இறைவனைத் தேடுவது; செயற்கரிய செய்யும் தொண்டின் உறைப்பால் இறைவனை அடையாதவர் எய்துவது, இன்னலேயாம்; உலகத்துயர்களை வெற்றி கொண்டு சிறிதும் விடாமல் இறைவனைச் சிக்கெனப் பற்றிக்கொண்டவரே, அவனைக் கண்டடைவராம்; மூச்சின் இயக்கம் அறிந்து முறையாகச் செலுத்தவல்லவரே, நிலைத்த உள்ளொளி கண்டடைவர்.

21. அறியாமை அகற்றல் : (191-246)

குதம்பாய், தீராநோய்க்கு ஆட்பட்டவர்க்கு நாள் என்ன செய்யும்? கோள் என்ன செய்யும்? வினையை அவை அகற்றி விடுமோ? தீட்டிலே உருக்கொண்டு வந்ததே உடல்; அவ் வாறிருக்கப் பின்னும் தீட்டு என்பதற்கு என்ன உண்டு? இறந்த பின்னர் பிணப்பறை கொட்டி எடுத்தால், பிணமானவர்க்கு அது கேட்குமோ? 'பெற்றோர் செய்வினை பிள்ளைகளுக்கு' என்பவர் மனத்தெளிவுடையவர் அல்லர்; அவ்வாறே, பிள்ளைகள் செய்யும் நல்வினை பெற்றோர்க்கு ஆகும் என்பதும் அறிவின்மையேயாம்; அவரவர் செய்வினைப் பிணிப்பைத் தீர்க்கப் பிறந்தவர்க்குப் பிறர் எவரே சொந்தமாக இருப்பார்? பார்ப்பனர் செய்யும் சடங்குகளால் எப்பயனும் வரப்போவதில்லை என்பதைத் திட்டமாக எண்ணுவாயாக; பிராமணர்க்குப் பசுவைத் தானமாகத் தந்தால் தந்த அவர்க்கு முத்தி வாய்த்திடுமோ? வேதம் என்று சுட்டிச் சொல்லியதை ஆய்ந்து பார்த்து வீண் என்று தள்ளிவிடுவாயாக; தன் பாவத்தைத் தான் தீர்க்க மாட்டாதவர் பிறர் செய்த கொடும்பாவத்தைத் தீர்த்துவிடுவரோ? வேள்விப் பொருளாக ஆட்டை வெட்டி வேகவைத்து உண்பவர்க்குக் கடைத்தேறும் வழியே இல்லை; வேதம் என்பவையும் புராணம் என்பவையும் சடங்குகள் என்பவையும் விரும்பியவாறு கற்பிக்க வந்தவைகளேயாம்.; வேள்விகள் சடங்குகள் என்பனவெல்லாம் பொருந்தாச் செய்கைகளேயாம்; சகுனம் பார்ப்பதுவும், அந்தி சந்தி தொழுகைகளும் அறிவற்ற செயல்களேயாம்; நல்லநாள் கெட்டநாள் என்று பார்ப்ப தெல்லாம் அறிவறியாத் தன்மையாலேயாம்; மையிட்டுக் காட்டல் என்பது பிறர் அறியாமல் ஏய்க்கும் ஏமாற்று வஞ்சமே யாம்; மாயம் மந்திரம் கண்கட்டு வித்தை என்பனவெல்லாம் தீத்தொழில்களேயாம்; கருவை அழித்து அக்கருவால் தீவினை செய்தால் நல்லவற்றை எல்லாம் அழித்துவிடும்; செய்வினை