உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குதம்பைச் சித்தர்

141

இனி, இவர்தம் சொல்லாட்சிகளைக் கருதலாம்: பெருமை சிறுமைகளை 'அரசன் முதல் ஆண்டிவரை' என்றும், 'தோட்டி முதல் தொண்டைமான் வரை' என்றும், 'தினைபனை' என்றும் வழங்கும் வழக்கம் உண்டு. அத்தகு வழக்குகளுள் ஒன்றே 'எறும்பு முதல் யானையீறாக' என்பது. இதனை "யானை தலையா எறும்பு கடையா" என்கிறார் இவர்.(31)

வஞ்ச உருக்கொண்டு மெய்ம்மானாகக் காட்டிப் பொய்ம் மானாகப் போனவன் 'மாரீசன்' என்பது இராமகாதைச் செய்தி. இவர் வஞ்சத்தை 'மாரீசம்' என்கிறார் (94). பெயர், வினையாக மாறுதல் உலகம் தழுவிய வழக்கு. காட்டிக் கொடுத்தலுக்கும், தமிழ் மொழிக்கேடு புரிதலுக்கும் நம் நாட்டில் வழங்கும் பெயர்கள் கற்றவர்கள் அறிந்தனவேயாம்.

'பசியைப் பாவி' என்பார் மணிமேகலையார் ; மணி மேகலையார் யார்? மணிமேகலை பாடிய சாத்தனாரும் தாம்! 'பசிப்பிணி' என்னும் புறப்பாடல். அதனைத் தீப்பிணி என்னும் திருக்குறள். நடுக்கும் பசியை எவரேனும் 'குளிர்பசி' என்பாரா? குதம்பையார் கூறுகிறார். குளிர்பசி என்று! ஏன்? குளிர்க்கு நடுக்கம் வருதல் இயற்கை தானே! சுற்றிவளைத்து இவ்வாட்சி யை மேற்கொள்கிறார் (120).

போகும் சாகும் என்பவற்றை 'போம்' 'சாம்' எனத் தொகுத்துரைக்கிறார். 'போம்போது'சாம்போது 'போங்காலம்' 'சாங்காலம்' என்பவை இவர் ஆட்சி (103, 2).

<

தூண்டாவிளக்கு', 'தீண்டாவிளக்கு' எனவும்,தண்டன் தெண்டன் எனவும், தரணி தாரணி எனவும், துர்க்கந்தம் துற்கந்தம் எனவும், எமன் ஏமன் எனவும் தூசி தூசு எனவும், இவரால் ஆளப்படுகின்றன.

சொந்தத்தைத் 'தொந்தம்' எனவும், குறையை 'நொள்ளை' எனவும் இவர் வழங்குதல் நாட்டு வழக்காகும். குந்தியிருத்தல், மேலைமினுக்குதல், கபிச்சி (நாற்றம்) என்பவை நாட்டுப்புற வழக்காகும். வியர்வை வெளிப்பட்டு உப்புப் படிந்து நாறுவதை 'நீச்சுக் கவிச்சி' என்பது நீற்றுக் கவிச்சி என்பதன் கொச்சை யாகும் (64)

மொய்ம்பு, பூவணை, கற்றா,செங்காவி ஆகிய அரிய இலக்கிய வழக்குகளையும் கையாண்டுள்ளார்.