உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

சித்தர் பாடல்கள் சீர்திருத்தப் பெட்டகம்; பகுத்தறிவுப் பாசறை; உள்ளொளி உறையுள்; உயிருய்க்கும் ஒளிநெறி!

சித்தருள் சித்தர், சிவவாக்கியர்! அவர், சித்தர் உலகின் நக்கீரர்! 'குற்றம் குற்றமே' என்பதைக் குலையாமல் - குறையாமல் - உரைக்கும் கொள்கை வீரர்! “ஊனுடம்பு ஆலயத்தை" உள்ளவாறு உணர்ந்து, உலகுய்ய உணர்த்தும் உரவோர்! தொண்டின் உறைப்பிலே துடித்தெழும்பிய தூண்டாத் தொண்டர் பெருமகனார்! 'காற்றின் கணக்கறிந்து கூற்றை உதைக்கும் நெறியறிந்த நேராளர்! அவரைப்பற்றிய மேலோட்ட ஆய்வு, முன்னை ஐம்பது பக்கங்கள்! அவர்தம் உள்ளோட்ட வழிவந்த பிழிவாம் பாடல்கள், பின்னை எழுபத்தாறு பக்கங்கள்!

சித்தர் நெறியை முற்றாக ஆய்ந்து பெருநூல் ஒன்று ஆக்குதல் வேண்டும். அது, இக்காலத்துச் சமயத்துள் புகுந்துள்ள புன்னோய்களுக்கு நன்மருந்தாகத் திகழும்!

சித்தரை எண்ணுதற்கு நிலைக்களம் வகுத்துத் தந்தவர்கள் சிங்கம்புணரி, சித்தர் வழிபாட்டுத் திருக்கூட்டத்தார். நூலுருத் தந்து தமிழுலா அருளியவர்கள் கழக ஆட்சியாளர் திரு. இரா. முத்துக்குமாரசாமி, எம்.ஏ.,பி.லிப்; அவர்கள். இவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைச் செலுத்துகின்றேன்.

சித்தர் நெறி செந்நெறி! செந்தண்மை நெறி! பின்னைப் புன்மைகளைக் களைந்து முன்னைப் பெருமையை முடித்து வைக்க வல்லது! அந்நெறி தழைத்து உலகம் உய்வதாக!

தமிழ்ச் செல்வம்,

பாவாணர் ஆராய்ச்சி நூலகம்

திருநகர், மதுரை -6.

தமிழ்த் தொண்டன்,

இரா. இளங்குமரன் 7-10-1984