உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்கண்டார்

நடு நாட்டைச் சார்ந்தோர் நல்லூர் திருப்பெண்ணா கடம்; அப்பெண்ணாகடத்து வாழ்ந்த சைவப் பெருமகனார் அச்சுதகளப்பாளர். அவர் நெடுங்காலம் மகப்பேறின்றி யிருந்தார். பின்னர்த் திருவெண்காட்டு இறைவர் திருவருளால் நன்மகப்பேறு வாய்த்தார்; அம்மகவுக்குத் 'திருவெண் காடர்' என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்.

திருவெண்காடர்

சீறிளமைப் பருவத்திலேயே திருவெண்ணெய் நல்லூரில் இருந்த தம் மாமனாரிடத்து வளர்ந்து வந்தார். அப்பொழுது, நந்தியருள் பெற்ற நாதராம் பரஞ்சோதியார் திருவருள் கடைக் கூட்டப் பெற்றார். வெண்ணெய் நல்லூர்ப் பொல்லாப் பிள்ளையார் திருவருளும் வாய்க்கப் பெற்றார். அவர் தம் மெய்ப்பொருள் உணர்வு மேதக்க சிவநெறிச் செல்வர்களையும் ஆசிரியர்களையும் வயப் படுத்தி ஆட்கொண்டது. அந்நிலையில், 'வெண்காடர்', திருப்பெயர் மெய்கண்டாராகத் திகழ்ந்தது! பொல்லாப் பிள்ளையார் அருளால் 'சிவஞான போதம்' அருளினார் மெய்கண்டார். இவர்தம் தலைமை மாணவர் திருத்துறையூர் அருணந்தி சிவனார். இவர் காலம் பதின்மூன்றாம் நூற்றாண்டு. தாயுமானவப் பெருந்தகை,

“பொய்கண்டார் காணாப் புனிதமெனும் அத்துவித மெய்கண்ட நாதனருள் மேவுநாள் எந்நாளோ?'

என வேட்கை விளம்புவார்.