உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெளிபொருள் விளக்கம் மங்கல வாழ்த்து

திருவெண்ணெய் நல்லூரில் கோயில்கொண்ட பிள்ளை யார் பேரருள் பெற்றவர் மெய்கண்டார். ஆதலால் தாம் கண்டடைந்த சிவஞான போதச் செம்பொருளை ஓதத் தொடங்குங்கால், அப் பிள்ளையாரை வணங்கி வாழ்த்தினார்.

பிள்ளையார் உளியால் பொளியப்படாத தன்னிலையுருவர். (சுயம்புமூர்த்தி), ஆதலால், பொல்லப்படாத (பொளியப்படாத செதுக்கப்படாத) அவர் பொல்லாப் பிள்ளையார் எனப் பட்டார். (பொல்லுதல் = பொள்ளுதல்)

பிள்ளையார், 'கல் ஆல் நிழல் மலவு இல்லார் அருளிய பிள்ளையார்' எனச் சொல்லப்பட்டார். தந்தை தகவு மைந்தர் தகவென உலகம் ஓதுதல் உண்மையால். 'கல் ஆல்' என்பது ஆலமரத்தின் வகையுள் ஒன்று. கல் என்பது அதன் வலிமை சுட்டியது. கல் அத்தி, கல்வாழை, கல்தாழை போல ஒருவகை என்க. கல்லால மரத்தின் நீழலில் இருந்து அறமுரைக்கும் 'மலைவு இல்லார்' என்று செம்பொருட் சிவத்தைக் குறித்தார். மலையை வில்லாக உடையவர் என்று பொருள் கொள்ளவும் இத்தொடர் கிடக்குமாயினும், மலைவு இல்லார் என்று பிரித்து மயங்குதல் எள்ளளவும் சேர்தல் இல்லாத முழுமுதல்' என்பதே தகுமாம். மயக்கம் நீக்குதல் நோக்கிலே அருளப்பட்ட நூல் இந்நூல் ஆகலின் அதற்கு ஏற்ப உரைத்தார் எனல் தகும். பற்றறுதல் வேண்டுவார் பற்றற்றானைப் பற்றுதல் நெறியாதல் போல, மயக்கம் நீங்க வேண்டுவார் மயங்குதல் சேராத றைவனை நினைந்தொழுகுதல் நெறியாம். இனித் தன்னை யுணர்ந்த தகவாளர் மயக்கத்தை இல்லையாகச் செய்பவர் என்பதுமாம். அவர் தகவு கூறவே, பிள்ளையார் தகவு அறிய வருமாகலின் அவர்க்கு உரைத்தார்.