உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞானபோதம்

209

இனி, அவை தொழிற்படுமாற்றையுந் தெளிவிப்பர். “இறைவன் திருவருளாற்றல், இறையியல் வழியாக உயிரின் அறிவு விருப்பு செயல் என்னும் மூவகை ஆற்றல்களையும் விளங்கச் செய்யும்; இறையியல் வழியாக வரும் அவ்வருளாற்றலே உயிரியலையும் கலையியலையும் தொழிற்படுத்தும்”என்பது அது.

இவ்விடத்தே சில குறியீடுகளை அறிந்துகொளல் நலம். பொறிகளுக்குப் புறக்கருவிகள் என்பதும், மனம் முதலிய வற்றுக்கு அகக் கருவிகள் அல்லது உட்கருவிகள் (அந்தக்கரணம்) என்பதும், அவற்றிற்கும் உள்ளால் இருக்கும் கலையியலே 'உள்ளகக் கருவி' என்றும், அதற்கும் உள்ளால் இருக்கும் உயிரை 'உள்ளம்' (உள்ளகம் என்பதன் தொகுத்தல்) என்றும் கூறுவர்.

திருவருள் கூட்டலால் கலையியல் தொழிற்பட்டு உயிரியல் இயக்கமுறுதல், ஒன்றன் ஒன்று தொடர்புடைய சக்கரங்களைக் கொண்டு இயங்கும் கடிகார அமைப்புப் போன்றதாம். ஓரிடத்து ஏற்படுத்தும் முடுக்கம் அடுத்ததை இயக்கி, அது பிறிதொன்றை இயக்கித் தொழிற்படச் செய்வதுபோலாம்.இவ்விடத்தே, உயிர்க்கலன் (Cell) நுண்மையும் அதன்படிப்படி விரிவாக்கமும் அதனுள் அடங்கிக்கிடக்கும் உறுப்புகளின் அமைதியும் எண்ணத் தக்கவையாம். ஆலம்விதையுள் அதன் அத்தனை பகுதிகளும் அடங்கிக் கிடக்கின்றன அல்லவோ! அதனால் அன்றே 'ஆலமர் வித்தின் அருங்குறள்' என்பதன் வழியாகக் கம்பர் திருக்குறளையும், திருமால் குறளையும் இணைத்து இரட்டுறலாக்கிக் கூறினார். இனி, நான்காம் நூற்பாவையும் அதன் பொருள் இயைவையும்

காணலாம்.

அந்தக் கரண மவற்றினொன் றன்று; அவை சந்தித்த தான்மா; சகசமலத் துணராது; அமைச்சர சேய்ப்பநின் றஞ்சவைத் தைத்தே. என்பது நூற்பா.

மூன்றாம் நூற்பாவிற் கூறிய ஆன்மா பற்றியதே இந்நூற் பாவுமாம். அந்நூற்பாவிற் கையாண்ட உத்தியையே இந்நூற்பா விலும் கையாண்டு உரைக்கின்றார் ஆசிரியர். ஈற்றில் நின்ற 'ஆன்மா' என்பதை, 'இலது என்றலின் ஆன்மா உளது' என்பன போல் இயைத்தவாறே. இந்நூற்பாவின் இடையில் நின்ற ஆன்மாவை முன்னும் பின்னும் இணைத்துக் கொள்கிறார். இடைநிலை விளக்கு என்னும் அணியின் வகையைச் சேர்ந்தது இவ்வமைப்பாம்.