உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞானபோதம்

221

வழங்குவர். அல்நிலையும் ஆகாமல், இறைநிலையும் ஆகாமல் இருக்கும் உயிரைத் தனிக்குறியீட்டால் வழங்கித் தெளிவுறுத்த விரும்பிய மெய்ப் பொருளாய்வாளர்கள் அதனை 'நிலையல் நிலை' (சதசத்து) என்று வழங்கினார்.

உயிர் தானே அறியாதது ஆதலாலும், அறிவிக்க அறியும் அறிவுடையது ஆதலாலும், அறிவிக்க அறியாத அல்நிலையும், அறிவிக்காமலே அறியும் இறைநிலையும் ஆகாமல் நிலையல் நிலையாக (சதசத்தாக)ச் சொல்லப்படும். நிலையின் இயல்வும், அல்நிலையின் இயல்வும் உடையதனை 'நிலையல்நிலை' என்று சொல்வது தக்கது தானே!

சத்து அசத்து சதசத்து என்பவை அந்நாளில் பெருக வழங்கியமையால் சான்றோர் அச்சொல்லாட்சிகளைப் பெருக வழங்கினர். திருமூலர்,

“சத்தும் அசத்தும் சதசத்தும் தான்கண்டு”

என்றும்,

“சத்தும் அசத்தும் சதசத்தும் தான்காட்டி”

என்றும்,

“சத்தும் அசத்தும் சதசத்தும் தான்கூடி”

என்றும் கூறுவர். (திருமந்திரம் 1420, 2058, 2328)

இவ்விளக்கங்கள் மேல்வரும் நூற்பாவின் பொருள் விளக்கத்திற்கு வேண்டுவன ஆகலின் விரித்துரைக்கப் பெற்றன வாம்.

உலகம்,உயிர்,இறை எனப் பொருள் மூவகைப்படுதல் மெய்ப்பொருள் ஆய்வாளர் கண்டது. இம் மூன்றன் அறிவும் உலக அறிவு, உயிர் அறிவு, இறையறிவு (பாசஞானம், பசுஞானம், பதிஞானம்) என்பன. கல்வி கேள்விகளால் உலக அறிவும், உண்மை அறிவாம். இயற்கை அறிவால் உயிர் அறிவும், இறையருள் கூட்டலால் இறையறிவும் ஆன்மா அடையக்கூடும். ஆதலால் உலக அறிவும், உயிர் அறிவும் கடந்து, இறையறிவு பெற்றார்க்கே இறை வெளிப்பாடுறும்! அவராலேயே இறைமை உணரப்படும் என்பதாம்.