உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞானபோதம்

235

பாயா வேங்கை என்பது வேங்கை மரத்தையும், ஓடாக் குதிரை என்பது குதிரை மலையையும் குறித்தாற்போல 'ஊராத் தேர்' என்பது பேய்த் தேரைக் குறித்த இதனை வெளிப்படை என இலக்கண நூலார் சுட்டுவர். கானல் நீரை இவ்வாறு சுட்டுதல் பண்டு தொட்டே பயிலும் வழக்கு என்பதை “உருவில் பேஎய் ஊராத் தேர்" எனவரும் அகப்பாடலால் (67) அறியலாம்.

பாசம் ஒருவிய பின்னை நிகழ்வு என்ன என்பார்க்குத் 'தண்ணிழலாம் பதி' என்றார்.

தண்ணிழலாம் பதி :

மலம் ஒருவிய பின்னே பதி தண்ணிய நிழலை அருளும் என்றார். இறைவன் திருவடி, 'நிழல்' எனப்பட்டதேன் எனின், பிறவியாம் வெம்மை நீக்கி, ஒன்றி உடனாகும் தன்மை அருளுதலால் தண்ணிழல் என்றார். வேந்தன் முடிமேல் அமைந்த குடைசெய்யாத நிழலை, இறைவன் அடிசெய்யும் என்பாராய்த் தண்ணிழலாம் பதி என்றார். முன்னை நூற்பாவில் 'அரன் கழல்' என்றமையால் நிழல் செய்வது அடி என்பதைப் பெறவைத்தார். அடியே தண்ணிழல் அருளும் எனின், திருவருள் நோக்கு முதலியவை தண்ணிழல் அருளலைச் சொல்ல வேண்டுவ தில்லையாய்ப் பெறப்படும்.

கொதிப்புறும் கொடுமைகளைப் பல்கால் பல்வகையில் வேந்தனால் செய்யப்பெற்றும், இறைவன் இணையடி தமக்குத் தண்ணிழல் அருள்தலைத் துய்த்த நாவுக்கரசர் "மாசில் வீணையும், மாலை மதியமும், வீசு தென்றலும், வீங்கு இளவேனிலும், மூசு வண்டு அறை பொய்கையும் போலிருத்தலை அருளிச்செய்தார்.

அகக்கண் நாடுமேனும், பாசம் ஒருவுமேனும், தண்ணிழலாம் பதி அருளுமேனும் ஆன்மாவின் கடப்பாடு என்ன என்பதைக் கூறுவாராய் 'விதி எண்ணுமஞ் செழுத்தே' என்றார்.

விதி எண்ணும் அஞ்சு எழுத்தே :

வாராது வந்து வாய்த்த திருவருளை, வாளா ஒழித்துவிடல் கூடாது என்பாராய் அதனைச் சிக்கெனப் பற்றிக்கொள்ள வழியுரைக்கும் ஆசிரியர் 'எண்ணும் அஞ்செழுத்தே விதி' என்றார்.

பிடித்தால் போதாது; சிக்கெனப் பிடித்தல் வேண்டும்; 'வல்லுடும்பெனப் பிடித்தல்' வேண்டும் என்பர் அல்லவோ;