உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமரகுருபரர் வரலாறு

திருநெல்வேலி மாவட்டத்தில் திருவைகுந்தத்தை அடுத்துக் கைலாசபுரம் என வழங்கப்பெறும் சிற்றூரில் சைவவேளாளர் குலத்தில் சண்முக சிகாமணிக் கவிராயரும் சிவகாம சுந்தரி அம்மையாரும் ஆற்றிய நற்றவப் பயனால் குமரகுருபரர் அவர்கட்கு மைந்தராய்த் தோன்றினார். அவர் பிறந்த நாள்முதல் ஐந்து அகவை வரையில் வாய்பேசாது ஊமையாய் இருந்தார். அது கண்ட பெற்றோர் மனம் வருந்தித் தமக்கு உறுதுணையாகிய திருச்செந்தூர் முருகப்பெருமான் திருமுன் சென்று வழிபட்டுத் தம் குறையைத் தெரிவித்து அருள்புரிய வேண்டினர்.

முருகப்பெருமான் அருளால் அக் குழந்தை அப்பொழுதே வாய் திறந்து அங்கிருந்தோர் வியப்புறும் வண்ணம் முருகனைப் போற்றிப் பாடியது. அதுவே 'கந்தர் கலிவெண்பா' ஆகும். பெற்றோர் மகிழ்ந்து பெருமானை வழிபட்டனர். பின்னர்க் குமரகுருபரர் வளர்ந்து இளைஞரான பின் தம் பெற்றோரிடம் விடைபெற்றுப் பல திருப்பதிகட்குச் சென்று வழிபட்டார். இவர்தம் கல்வி அறிவும் கவிபாடும் திறமும் கண்டு இவரை மக்கள் வரவேற்றுச் சிறப்புச் செய்தனர். மதுரை மன்னர் திருமலை நாயக்கரும் சிறப்புச் செய்து பல பரிசுகளை வழங்கினார்.

அதன்பின் அடிகள் தருமபுரத்துத் தலைவராக விளங்கிய

மாசிலாமணி தேசிகரை வழிபட்டு அவருக்கு மாணாக்கரானார். பின்னர்க் காசிமாநகர் சென்று அங்கு ஆட்சிபுரிந்த முகமதிய மன்னரைத் தம் வயப்படுத்தி அவர் அளித்த இடத்தில், இப்போது குமாரசாமி மடம் என வழங்கும் ஒரு மடத்தினை நிறுவினார். சைவ சமயத் தொண்டு செய்து பல ஆண்டுகள் வாழ்ந்து, காசிமா நகரில் வீடுபேறுற்றார். இவர்காலம் ஏறத்தாழ முந்நூறு ஆண்டு கட்கு முற்பட்டதாகும். இவர் இயற்றிய நூல்கள் சொற்சுவையும் பொருட்சுவையும் பெற்று விளங்குவதோடு, திருவருட் செல்வத்தை வழங்கும் சிறப்பும் உடையனவாகும்.

இவர் இயற்றிய நீதிவெறிவிளக்கம், சகல கலாவல்லி மாலை, மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ் என்னும் நூல்கள் புலவர்களாற் பெரிதும் பாராட்டப்படுகின்றன. தமிழ்மொழியிற் சிறந்த பயிற்சியும் புலமையும் பெற விரும்புவோர் குமரகுருபர அடிகளின் நூல்களை விரும்பிப் படிப்பது இன்றிமையாததாகும்.