உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீனாட்சியம்னை குறம்

235

1.

சிந்து

பூமருவிய பொழில்திகழ் மதுரா

புரிமருவிய அங்கயற்கண் அம்மை மேதருவிய மதிதவழ் குடுமித்

தென்பொதியக் குறத்திநான் அம்மே,

(தெ - ரை.) "அம்மே நான், பூக்கள் பொருந்திக் கிடக்கும் சோலைகள் விளங்கும் மதுரைத் திருநகரில் கோயில் கொண்ட அங்கயற்கண் அம்மையின், தெய்வத் தன்மை வாய்ந்ததும் மதியம் தவழும் முகடுகளையுடையதும் ஆகிய தென்பொதிய மலைக் குறத்தியாவேன்."

'அம்மை பொதியம்' என இயைக்க, குறி சொல்பவள் குறி கேட்கும் தலைவியிடம் தன் இருப்பிடம் கூறியது இது. மேல் வருவனவும் (2, 3) இதுவே.

(அ - ள்.) மருவிய -பொருந்திய ; குடுமி -சிகரம்,முகடு; தென் - அழகு; தெற்குமாம்.

2. செந்நெல் முத்தும் கன்னல்முத் தும்ஒளி

திகழ்மதுரை அங்கயற்கண் அம்மை

பொன்னுமுத்தும் சொரியும்வெள் அருவிப்

பொதியமலைக் குறத்திநான் அம்மே.

(தெ-ரை.) "அம்மே நான், 'செந்நெல்' தந்த முத்தினாலும் கரும்பு தந்த முத்தினாலும் ஒளிவிளங்கும் மதுரை அங்கயற்கண் அம்மையின், பொன்னும் முத்தும் அள்ளிவீசும் தூய அருவி களையுடைய பொதியமலைக் குறத்தி யாவேன்."

(அ - ள்.) கன்னல் - கரும்பு; நெல்லிலும் கரும்பிலும் முத்துப் பிறக்கும் என்பது இலக்கிய வழக்கு. நெல், கரும்பு முதலிய வற்றின் முத்துக்களைக் கூறியமையாலே சங்கு தந்த முத்துக்கள் கிடத்தல் கூறாமலே அறியப் பெறும்.