உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணைக் கலம்பகம்

83

(6) இமவான் மகளாகிய இனிய உமையம்மையின் அழகிய பருத்த ரு மார்பகங்களின் சுவடு உண்டாகும்படி இன்புற்ற தினால் நெகிழ்ச்சி பெற்றன;

(7) கதிரோனைப் போல ஒளிவீசி வியக்கத் தக்கவாறு கவடுபட்டு எழுந்த வலிய பவழமாலை என்னுமாறு வளர்ந்தன;

(8) கொன்றை, தாமரை, குவளை, மகிழ், செருந்தி, குரா அலரி, சண்பகம் ஆகியவற்றின் தேன் நிறைந்த மலர்களால் தொடுக்கப் பெற்ற மாலையால் நிறைந்தன;

(9) பகைவர்களின் முப்புரங்களும் அழியவும், தேவர் மனிதர்களின் அச்சம் அகலவும், பொன்மலையாகிய மேருவை வில்லாகக் கொண்டு நாணொலி செய்தன;

(10) விற்கலையில் தேர்ந்த அருச்சுனனுக்குப் பகைவர் அழிந்து படப் போர்புரியும் பாசுபதம் என்னும் அம்பினைத் தருதற்கு, மெய்யாக வந்து மோதுகின்ற மற்போர் செய்தன;

(ii) தாமரை மலராகிய மண்டபத்தில் வீற்றிருக்கும் நான்முகனின் அழகிய தலையோடு விளங்குகின்ற மூன்று குடுமிகளையுடைய வேலை விரும்பின;

(12) பெரிய அழகிய குடம் போன்ற மத்தகத்தையும் வெண்மையான நல்ல தந்தத்தையும் அஞ்சாமையும் மதத்தினையும் உடைய கயமுகாசுரனின் தோலாகிய போர்வையைக் கொண்டன;

(13) செந்நிற ஒளியினையுடைய, மிகுந்த மணிகள் நெருங்கி விளங்குகின்ற நச்சுப்பாம்புகளின் கங்கணம் ஆகிய அணிகலங் களால் நிறைந்தன;

(14) எப்பொழுதும் திருமன்றில் நடனமாடும் தொழிலுக்கு அவிநயம் பிடித்து அழகோடு இருந்தன;

(15) அரிய திருமறைகளை அறிந்த புகழ்வாய்ந்த சீர்காழி ஞானசம்பந்தர், செந்தமிழ் வல்ல திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்திகள் ஆகிய மூவர் முதலிகளால் புகழப்பெற்றன.

(வி-ரை) பாடு புகழ்பெறும் தலைவனின் தோள்களின் சிறப்புகளைப் பாடுவது 'புயவகுப்பு' என்னும் உறுப்பு ஆகும். தோளின் பெருமைகளையெல்லாம் தொகுத்துக் கூறுவதா கலின், அப் பொருளுக்கு ஏற்ப இவ் வண்ண விருத்தம் அடிக்கு முப்பத் திருசீர்களைக் கொண்டு வந்தது. இவ்வாறே பிற கலம்பகங்களிலும் சீர்மிக்கு வருதல் காண்க.