உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

இளங்குமரனார் தமிழ்வளம் - 39

இந்தப் பணிகள் ஊரைக் கடந்து வட்டம் மாவட்டமாய் அவையும் கடந்து மாநிலப் பரப்பைத் தழுவவும் ஆயது.

ஒரு முறை கிடைத்த ஊதிய உயர்வின் நிலுவைத் தொகை 1,11,000 ஒரு மொத்தமாகக் கிடைத்ததாம் அத்தொகை முழுவதையும் பள்ளிச் சீரமைப்புத் திட்டத்திற்கே உதவினார். குடும்பச் சொத்தில் இருந்து இவர் பங்குக்கு வந்த தொகை மூன்றரை இலக்கம். அதனையும் முழுதுறக் சீரமைப்புக்கே உதவினார்.

திக்கற்றோர்க்கென ஓரில்லம் நடத்தி வருகின்றார். அதிலுள்ள குழந்தையர் 250 பேர்கள்!

குழந்தைப் பூங்கா ஒன்றை அமைக்கும் திட்டமும் கொண்டுளார். ஆசியத் துணைக் கண்டத்திலேயே பெரியதோர் குழந்தையர் நூலகம் அமைக்கவும் முனைந்துளார்.

அனைத்து நாட்டுக் குழந்தையர் நல்வாழ்வு நிறுவனம் இவர்தம் பணிக்கு ஆக்கமும் ஊக்கமும் செய்கின்றன.

உள்ளமுடையார் உதவியைத் திரட்டி அவ்வவ்வூர்ப் பணிக்கே ஒப்படைத்து நிற்கும் இவர் தொண்டு ஊரூராய் விரிகின்றது! உவப்புவப்பாகத் திகழ்கின்றது.

இப்பெருந் தொண்டர் பா. கலியாணசுந்தரர் இவர்தம் தொண்டின் சிறப்பிடம் திருவைகுண்டம்.

பிறர் நலம் நாடும் இப்பெருந்தகை போலும் ஒருவரை வள்ளுவக் கிழவர் கண்டாரோ?

என்னே இவர்தம் விரிநிலை! என்னே இவர் தொண்டென வியந்து வியந்து நின்றாரோ?

அதனால்

“தாளாற்றித் தந்த பெருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு" (212)

என்றாரோ!

செய்தி. செந்தமிழ்ச் செல்வி; ஆசிரிய உரை மே.1992 சிலம்பு 66: 9